க்ரைம்

சென்னை | பைக் டாக்ஸியில் பயணித்த பெண் பயணியிடம் அத்துமீறல்: சென்னை இளைஞர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: தனியார் செயலி மூலம் பைக் டாக்ஸி முன்பதிவு செய்து இருசக்கர வாகனத்தில் பயணித்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பைக் ஓட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை நீலாங்கரை பகுதியில் வசிக்கும் 33 வயதுடைய பெண் ஒருவர், கடந்த 19-ம் தேதி நள்ளிரவு தனது செல்போனில் தனியார் செயலி மூலம் பைக் டாக்ஸிக்கு பதிவு செய்து, கிண்டியில் இருந்து கொட்டிவாக்கம் பகுதிக்கு சென்றுள்ளார்.

அந்த பைக்கை நடனசபாபதி (22) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அப்பெண்ணை வீட்டில் இறக்கிவிட்ட அந்த இளைஞர் பயணித்து வந்த பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்டு பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் உடனடியாக அந்த இடத்தில் இருந்து தப்பிச் செல்லவே, அவரைப் பின்தொடர்ந்து சென்று இதுகுறித்து வெளியில் யாரிடமும் சொல்ல கூடாது என்று கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

பயந்து போன அப்பெண் இதுபற்றி நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, போலீஸார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிந்து பைக் ஓட்டி வந்த குன்றத்தூரைச் சேர்ந்த நடன சபாபதியை கைது செய்தனர். அவரிடமிருந்து செல்போன் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT