தாகா, சாஷிப் 
க்ரைம்

பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் திடீர் திருப்பம்; குற்றவாளிகள் இருவர் சென்னையில் தங்கி இருந்தனரா?

செய்திப்பிரிவு

சென்னை: பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் திடீர் திருப்பமாக, குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய இருவர் சென்னையில் தங்கி இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் கைப்பற்றப்பட்ட தொப்பி மூலம் என்ஐஏ அதிகாரிகள் துப்பு துலக்கி வரு கின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது: பெங்களூருவில் உள்ள ராமேசுவரம் கஃபே ஓட்டலில் கடந்த 1-ம் தேதி குண்டு வெடித்தது. இதில் 10 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து பெங்களூரு போலீஸார் 8 தனிப்படைகளை அமைத்து விசாரணையை தொடங்கினர். இதில், சந்தேகிக்கப்படும் குற்றவாளி வாடிக்கையாளர் போல ஓட்டலுக்குள் நுழைந்த‌து கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

அவர் கருப்பு பேன்ட், சட்டை, வெள்ளை தொப்பி, கருப்பு கண்ணாடி, முகக் கவசம் அணிந்திருந்தது கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் தெரிய வந்தது.

இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து ‘பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளி குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் சன்மானமாக வழங்கப்படும்’ என என்ஐஏ அறிவித்தது. தொடர்ந்து குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணை தீவிரமடைந்தது.

இதில் சந்தேகிக்கப்படும் குற்றவாளி, உணவகத்தில் குண்டு வைத்துவிட்டு அங்கிருந்து அரசுப் பேருந்து மூலம் துமக்கூரு சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அதன்பிறகு மார்ச் 5-ம் தேதிவரை அங்கிருந்த குற்றவாளி, பெல்லாரி, மந்திரா லயம் ஆகிய இடங்களுக்குச் சென்றுள்ளார்.

மார்ச் 7-ம் தேதி கார்வார் அருகிலுள்ள கோகர்ணா பேருந்தில் பயணிப்பது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. அன்றைய தினம் அவர் தொப்பி, கண்ணாடி அணியாமல் பயணித்தது உறுதியானது. அதன் பிறகு அவர் மங்களூருவை அடுத்துள்ள பட்கலுக்கு சென்றதை என்ஐஏ அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இதையடுத்து நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் குண்டு வெடிப்பை நிகழ்த்திய குற்றவாளி, அவர் அணிந்திருந்த தொப்பியை 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கழிப்பிடத்தில் வீசிச் சென்றது தெரியவந்தது. அந்த தொப்பியை என்ஐஏ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதில், ஒட்டியிருந்த முடியை அடிப்படையாக வைத்து மற்றொரு தனிப்படையினர் தடய அறிவியல் துறையினர் உதவியுடன் துப்பு துலக்கி வருகின்றனர்.

இந்நிலையில், கைப்பற்றப்பட்ட தொப்பி சென்னையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வாங்கப்பட்டது தெரியவந்தது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் குண்டு வெடிப்புக்கு முன்னர் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் தங்கி இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

நூற்றுக்கணக்கான சிசிடிவிகேமரா காட்சிகளை அடிப்படையாக வைத்து இந்த தகவல் வெளியாகி வருகிறது. பறிமுதல் செய்யப்பட்டுள்ள தொப்பியை துருப்பு சீட்டாக வைத்து விசாரணை மேம்படுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தொப்பி போன்று, 400 தொப்பிகள் விற்கப்பட்டுள்ளது.

அதில், ஒரு தொப்பியை இரண்டு பேர்சென்னை மயிலாப்பூரில் வாங்கியிருப்பதும், அவர்கள் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. தொடர் விசாரணையில் அவர்கள் தலைமறைவாக இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது.

பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரும் சில நாட்கள் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள விடுதியில் தங்கி இருந்ததாகஎன்ஐஏ வின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும்,குண்டுவெடிப்புக்கு பிறகு குற்றவாளிகள் இருவர் கர்நாடகத்திலிருந்து கேரளம் சென்று, அங்கிருந்து தமிழகம் வந்து, அதன் பிறகுதமிழகத்திலிருந்து ஆந்திரா சென்றிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஏற்கெனவே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 3 பேரிடம்தொடர் விசாரணை நடைபெறுகிறது. இதற்கிடையே சாஷிப், தாகாஆகிய மேலும் 2 பேர் போலீஸாரின் தேடுதல் வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள் ளனர்.

SCROLL FOR NEXT