சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரால் மீட்கப்பட்ட சுவாமி சிலைகள். 
க்ரைம்

பழமையான 6 சுவாமி சிலைகள் மீட்பு: வெவ்வேறு இடங்களில் 11 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: மதுரை, புதுக்கோட்டை, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் கடத்தி பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழமையான 6 சுவாமி சிலைகள் மீட்கப்பட்டன. சிலைக் கடத்தலில் ஈடுபட்டதாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை மாவட்டம், விளாங்குடி செம்பருத்தி நகரில் உள்ள பிலோமின்ராஜ் என்பவரது வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழமையான சுவாமி சிலைகள் கடத்தி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தமிழக காவல் துறையின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பினோமின்ராஜ், அவரது கூட்டாளிகள் ஜோசப் கென்னடி,டேவிட், அன்புராஜன் ஆகிய 4 பேர் கைதுசெய்யப்பட்டனர். விசாரணையில், இச்சிலையானது விளாங்குடி விசாலாட்சி மில் வளாகத்தில் உள்ள விநாயகர் கோயிலிலிருந்து திருடப்பட்டது தெரியவந்தது.

இதேபோல், புதுக்கோட்டை ஆலத்தூர் சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட பழமையான அம்மன் சிலை பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக காரைக்குடி அஜித், கோவில்பட்டி ராம், விருதுநகர் அகமது, ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் புலிச்சப்பள்ளம் என்ற இடத்தில் செல்வகுமார்என்பவரது வீட்டில் சோதனை நடத்தியபோது அங்கிருந்து 3 பெருமாள் உலோகச் சிலைகள், ஒரு அனுமன் சிலை (ராமர் மற்றும் லட்சுமணரை தோளில் ஏந்திய சிலை) மற்றும் ஒரு திருவாச்சி கைப்பற்றப்பட்டது. இதில், தொடர்புடையதாக பாரதிதாசன், நிசார், அகஸ்டின், முத்துகிருஷ்ணன் ஆகிய4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிந்துள்ள சென்னை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்யப்பட்ட 11 பேரிடமும் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT