பர்கூர் சமுதாய கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை, கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் நிகழ்ந்த இடத்தை பர்கூர் எம்எல்ஏ மதியழகன் பார்வையிட்டார். 
க்ரைம்

பர்கூர் பிளாஸ்டிக் விற்பனை கிடங்கில் தீ விபத்து: ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்

எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பிளாஸ்டிக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேருந்து நிலையம் அருகே பேரூராட்சிக்கு உட்பட்ட சமுதாயக் கூடம் செயல்பட்டது. இதனை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திமுக நிர்வாகி சந்திரன் என்பவர் வருடாந்திர வாடகைக்கு எடுத்தார். தொடர்ந்து இங்கு எந்த திருமண நிகழ்ச்சிகள் நடக்கவில்லை. சந்திரன், பர்கூர் அடுத்த கப்பல்வாடியை சேர்ந்த கதிரேசன் என்பவருக்கு உள்வாடகைக்கு சமுதாய கூடத்தை வாடகைக்கு விட்டார்.

கதிரேசன் சமுதாய கூடத்தில் பக்கவாட்டில் தகர கொட்டகை அமைத்து பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை மற்றும் கிடங்காக மாற்றினார். இதற்கு இப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, மீண்டும் சமுதாய கூடமாக மாற்றக் கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த 19-ம் தேதி கதிரேசன் பிளாஸ்டிக் கடை, மற்றும் குடோனை மூடிவிட்டு, தன் ஊரில் நடக்கும் கோயில் திருவிழாவிற்கு சென்றுள்ளார். கடந்த 2 தினங்களாக கடையும் திறக்கவில்லை.

நேற்று நள்ளிரவில் பிளாஸ்டிக் குடோனிலிருந்து கரும்புகை வந்துள்ளது. சிறிது நேரத்தில் பிளாஸ்டிக் குடோன் தீப்பிடித்து எரிந்துள்ளது. தகவலறிந்து விரைந்து வந்த பர்கூர் தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கு முயற்சித்துள்ளனர். ஆனால் குடோனில் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகம் இருந்ததால், தீ மளமளவென பரவியது. இதையடுத்து கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி தீயணைப்பு நிலையங்களிலிருந்து தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள், 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீவிபத்துக்கு காரணம் மின் கசிவா, காஸ் கசிவா அல்லது வேறேதும் காரணமா என்ற கோணங்களில் பர்கூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த தீ விபத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமானது. மேலும், பர்கூர் எம்எல்ஏ மதியழகன் தீ விபத்து நடத்த இடத்தை பார்வையிட்டார்.

SCROLL FOR NEXT