மூணாறு: மூணாறு அருகே சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டதில் குழந்தை உட்பட தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 14 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிரஷர் குக்கர் நிறுவனம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முகவர்களை மூணாறுக்கு நேற்று முன்தினம் சுற்றுலா அழைத்துச் சென்றது. 26 பேர் வேன் மற்றும் காரில் நேற்று மாலை மாங்குளம் அருகே உள்ள ஆனைகுளத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர். தேன்மரம் என்ற இடத்தில் சென்ற போது வளைவில் வேன் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு 100 அடி பள்ளத்தில் பலமுறை உருண்டு கவிழ்ந்தது.
பயங்கர சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் தேனி சின்னமனூரைச் சேர்ந்த குணசேகரன் ( 71 ), தேனியைச் சேர்ந்த அபினவ் - சரண்யா தம்பதிகளின் மகன் தன்விக் ( 1 ) மற்றும் ஈரோடு பாத்திரக்கடை உரிமையாளர் பி.கே.சேது ( 34 ), அபினாஷ் மூர்த்தி ( 30 ) ஆகிய 4 பேர் உயிரிழந்தனர்.
காயமடைந்த ஓட்டுநர் உப்புலி ராஜ் ( 36 ), ஆறுமுகம் ( 63 ), சரண்யா ( 24 ), கீதா ( 30 ), ஜோதிமணி ( 65 ) உள்ளிட்ட 14 பேர் அடிமாலி தாலுகா மருத்துவமனை, தொடுபுழா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து மூணாறு போலீஸார் விசாரிக்கின்றனர்.