க்ரைம்

சிவில் நீதிபதி தேர்வின்போது புளூ டூத் மூலம் முறைகேட்டில் ஈடுபட்ட ஈரோடு வழக்கறிஞர்: வாழ்நாள் தடை விதித்த டிஎன்பிஎஸ்சி

செய்திப்பிரிவு

சென்னை: சிவில் நீதிபதி தேர்வின்போது தேர்வறையில் புளூ டூத் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்ட ஈரோடு வழக்கறிஞருக்கு வாழ்நாள் தடை விதித்து டிஎன்பிஎஸ்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழக அரசின் நீதித்துறை பணியில் அடங்கிய சிவில் நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வை டிஎன்பிஎஸ்சி அண்மையில் நடத்தியது.

தேர்வறையில் ஒழுங்கீனம்: இத்தேர்வில் 3 தேர்வர்கள் தேர்வறையில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த எஸ்.அர்ச்சனா என்ற தேர்வர், தேர்வுக்கூட கண்காணிப்பாளர் மற்றும்தலைமை கண்காணிப்பாளரிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாலும், வேலூர் காட்பாடியைச் சேர்ந்த பிரதானா ஷேரன் என்ற தேர்வர், தேர்வறையில் மற்ற தேர்வருடன் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாலும் இருவரும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தேர்வெழுத தடை விதிக்கப்பட்டுள்ளது.

வாழ்நாள் தடை: அதேபோல், ஈரோட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.கே.விக்னேஷ் தேர்வறையில் புளூ டூத் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டதால் அவருக்கு நிரந்தர தடை (வாழ்நாள் தடை) விதிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து அவர் இனிமேல் டிஎன்பிஎஸ்சி நடத்தும் எந்த தேர்வையும் எழுத முடியாது. நடவடிக்கைக்கு உள்ளான 3 தேர்வர்களின் பெயர், முகவரி, தேர்வு பதிவெண், தேர்வெழுதவிதிக்கப்பட்ட தடைகாலம்,நடவடிக்கை எடுக்கபட்டதற்கான காரணம் ஆகிய முழு விவரங்களையும் டிஎன்பிஎஸ்சி தனது அரசிதழில் வெளியிட்டுள்ளது.

SCROLL FOR NEXT