ஆவடி: ஆவடி அருகே கோயில் பதாகை பகுதியில் நேற்று தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, ஆவடியிலிருந்து செங்குன்றம் செல்லும் ‘61 ஆர்’ என்ற தடம் எண் கொண்ட மாநகர பேருந்தில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பேருந்தின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த இளைஞர்கள் 3 பேர், தாங்கள் வைத்திருந்த கைப்பையை விட்டுவிட்டு ஓடினர்.
அந்த கைப்பையை தேர்தல் பறக்கும் படையினர் எடுத்து பார்த்தபோது அதில், 15 ஆயிரம் மாத்திரைகள் இருந்ததும், ஆங்கில மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் அந்த மாத்திரையை போதைக்காக இளைஞர்கள் பயன்படுத்தி வருவதும் தெரியவந்தது.
தொடர்ந்து, தப்பியோடிய 3 இளைஞர்களில், கோயில் பதாகைபகுதியில் பதுங்கியிருந்த சென்னை,முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்த தினேஷ்(24), 17 வயது சிறுவன் ஆகியோரை தேர்தல் பறக்கும் படையினர் பொதுமக்கள் உதவியுடன் பிடித்தனர்.
ஆவடி டேங்க் பேக்டரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தினேஷ் உள்ளிட்ட இருவரிடம் நடத்திய விசாரணையில், ஆந்திர மாநில பகுதியிலிருந்து இந்த மாத்திரைகளை மொத்தமாக வாங்கி வந்து, இங்கு இளைஞர்களுக்கு ஆன்லைன் மூலமும், நேரடியாகவும் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரிய வந்ததாக போலீஸார் கூறினர்.