க்ரைம்

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு - தொழிலாளி மீது குண்டர் சட்டம் @ சென்னை

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் சிறுமிகளுக்கு மர்ம நபர் ஒருவர் சாக்லெட்வாங்கிக் கொடுத்து பாலியல் தொந்தரவு அளித்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் ஒருவர் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஜனவரி மாதம் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் அந்த மர்ம நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், அவர் அடையாறு மல்லிப்பூ காலனியைச் சேர்ந்த யோவான் ( 30 ) என்பதும், இவர் திருவான்மியூர் அரசு பள்ளியில் படிக்கும் 7 வயது சிறுமிகள் பலருக்கு சாக்லெட் வாங்கி கொடுத்து ஏமாற்றி பாலியல் தொந்தரவு கொடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், யோவானை கடந்த பிப்.2-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், யோவான் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் போலீஸாருக்கு பரிந்துரை செய்துள்ளார். இதனை ஏற்று, நீலாங்கரை போலீஸார், ஏற்கனவே சிறையில் இருக்கும் யோவான் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT