க்ரைம்

மயிலாடுதுறை | தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய வழக்கில் பாஜக மாவட்ட தலைவர் கைது

செய்திப்பிரிவு

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனகர்த்தரை பணம் கேட்டு மிரட்டிய வழக்கில், பாஜக மயிலாடுதுறை மாவட்டத் தலைவரை தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

தருமபுரம் ஆதீனகர்த்தர் தொடர்பான வீடியோ, ஆடியோ இருப்பதாகக் கூறி, பணம் கேட்டு சிலர் மிரட்டுவதாக ஆதீனகர்த்தரின் சகோதரர் விருத்தகிரி, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த பிப்.25-ம் தேதி புகார் அளித்தார்.

அதன்பேரில் 9 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து , தனியார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, திருவெண்காடு சம்பாகட்டளையைச் சேர்ந்த ரவுடி விக்னேஷ், ஆடுதுறை வினோத், நெய்க்குப்பையைச் சேர்ந்த நிவாஸ் ஆகிய 4 பேரை பிப். 28-ம் தேதி கைது செய்தனர்.

மேலும், இதில் தொடர்புடைய பாஜக மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் க.அகோரம் உள்ளிட்ட 5 பேரை தேடி வந்தனர். இந்நிலையில், மும்பையில் பதுங்கியிருந்த பாஜக மாவட்டத் தலைவர் அகோரத்தை தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவரை இன்று (மார்ச் 16) மயிலடுதுறைக்கு அழைத்து வந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT