கும்மிடிப்பூண்டி: சென்னை- கும்மிடிப்பூண்டி ரயில்வே மார்க்கத்தில், கடந்த 5-ம் தேதி இரவு 10.45 மணியளவில், சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட புறநகர் மின்சார ரயில், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
அந்த மின்சார ரயிலின் ஒரு பெட்டியில், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சுண்ணாம்புகுளம் கிராமத்தைச் சேர்ந்த மவுலீஸ்(24), ஏடூர் கிராமத்தை சேர்ந்த சரத் (26), கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளையராகவன் (21), உத்திராபதி(27) ஆகியோர் ஒரு பெட்டியில் பயணித்தனர்.
இந்நிலையில், மின்சார ரயில், பொன்னேரி அருகே கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்ற போது, மவுலீஸ் உள்ளிட்ட 4 பேர் பயணித்த பெட்டியில், 25 வயது மதிக்கத்தக்க மர்ம கும்பல் ஏறியது. அக்கும்பல், மறைத்து வைத்திருந்த கத்தியால் பயணிகள் 4 பேரையும் தாக்கி, அவர்களிடம் இருந்து ரூ.5,500, 4 செல்போன்களை பறித்தது.
தொடர்ந்து, அக்கும்பல், கும்மிடிப்பூண்டி கன்னியம்மன்கோயில் ரயில்வே மேம்பாலம் அருகே ரயில் சென்ற போது, அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி, இறங்கி தப்பி சென்றது.
இச்சம்பவத்தில், தலை மற்றும் கை பகுதிகளில் காயமடைந்த 4 பயணிகளும், கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இச்சம்பவம் குறித்து, மவுலீஸ் அளித்த புகாரின் பேரில் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மர்ம கும்பலை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், ஓடும் ரயிலில் 4 பயணிகளை தாக்கி, பணம், செல்போன்கள் பறித்த சம்பவம் தொடர்பாக, மீஞ்சூர் அருகே நந்தியம்பாக்கம் ரயில் நிலையம் அருகே தலைமறைவாக இருந்த கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த லெவின்(26), திருப்பாலைவனத்தைச் சேர்ந்த விஜி (24) ஆகிய இருவரை நேற்று முன்தினம் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்து இரு கத்திகளை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, ரயில்வே போலீஸார் லெவின், விஜியை கும்மிடிப்பூண்டி ஜே.எம். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை, புழல் மத்திய சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கணேஷ்(27), திருவள்ளூரை சேர்ந்த பிரவீன் (27), வெங்கடேஷ்(25) ஆகிய 3 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.