கோப்புப்படம் 
க்ரைம்

2023-ல் வாகன திருட்டு இரண்டு மடங்காக உயர்வு: கார் திருட்டில் முதலிடத்தில் டெல்லி, 2-ம் இடத்தில் சென்னை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: வாகனங்கள் அதிகமாக திருடு போகும் இந்திய நகரங்களின் பட்டியலில் முதல் இடத்தில் டெல்லி, இரண்டாம் இடத்தில் சென்னை இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

வாகன திருட்டு குறித்து, ‘திருட்டு மற்றும் நகரம் 2024’ என்ற அறிக்கை வெளிவந்துள்ளது. 2023-ஆம் ஆண்டு இந்தியாவில் திருடுபோன கார்களில் 80 சதவீதம் டெல்லியில் களவாடப்பட்டவை. ஒவ்வொரு 14 நிமிடத்துக்கும் ஒரு கார் நாட்டின் தலைநகரில் திருடு போயிருக்கிறது. டெல்லியில் கார் திருட்டு தொடர்பாக நாளொன்றுக்கு சராசரியாக 105 புகார்கள் காவல்துறையில் பதிவாகியுள்ளன.

டெல்லிக்கு அடுத்தபடியாக அதிக வாகன திருட்டு நடைபெறும் நகரங்களின் பட்டியலில் சென்னை இரண்டாமிடம் பெற்றுள்ளது. 2022-ஆம் ஆண்டு சென்னையில் 5 சதவீதமாக இருந்த கார் வாகன திருட்டு 2023-ஆம் ஆண்டில் 10.5 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. பெங்களூரு மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. இந்த நகரங்களை ஒப்பிடுகையில் ஹைதராபாத், மும்பை மற்றும் கொல்கத்தா நகரங்களில் வாகன திருட்டுகள் குறைவு என்றாலும் கடந்த 2022-ம்ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2023-ல்கார் திருட்டு இங்கு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

இந்திய அளவில் அதிகப்படியாக 47 சதவீதம் வரை மாருதி சுசுகி ரக கார்கள் திருடப்பட்டுள்ளன. டெல்லியில் மாருதி வேகன் ஆர் மற்றும் மாருதி ஸ்விஃப்ட் கார்கள் அடிக்கடி திருடுபோவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதுபோக ஹீரோ ஸ்பிளண்டர், ஹோண்டா ஆக்டிவா, ராயல் என்பீல்ட் கிளாசிக் 350, ஹோண்டா டியோ, ஹீரோ பேஷன் ஆகிய இரு சக்கரவாகனங்களும் அதிகம் திருடுபோவதாகப் புகார்கள் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து அக்கோ பொது காப்பீட்டு நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி அனிமேஷ் தாஸ்கூறும்போது, "கரோனா பெருந்தொற்று காலத்துக்குப் பிறகு வாகன போக்குவரத்து அதிகரித்திருப்பதை அடுத்து வாகன திருட்டும் பல மடங்கு கூடிவிட்டது. வாகன நிறுத்தத்திற்கு போதுமான இட வசதி நகரங்களில் இல்லாததே இதற்கு முக்கிய காரணம்" என்றார்.

SCROLL FOR NEXT