சென்னை: சென்னையில் துப்பாக்கி முனையில் ஒரே இடத்தில் 17 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 3 துப்பாக்கிகள், 14 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி உட்பட அனைத்து வகையான குற்றச் செயல்களையும் முற்றிலும் தடுக்க போலீஸார் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக ரோந்து மற்றும் கண்காணிப்பு முடுக்கிவிடப்பட்டுள்ளது. மேலும், தலைமறைவு ரவுடிகள் கணக்கெடுக்கப்பட்டு அவர்களைக் கைது செய்யும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக ரவுடிகளை கைது செய்யும் பணியும் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், திருமங்கலத்தில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் ரவுடிகள் கும்பலாக, கொலைத் திட்டத்துடன் பதுங்கியிருப்பதாக அதிதீவிர குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்து.
இதையடுத்து, அப்பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் இரவு சம்பந்தப்பட்ட ஓட்டலை துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தனர். தப்பிக்க நினைத்தால் துப்பாக்கிச் சூடு நடத்துவோம் என போலீஸார் எச்சரித்தனர்.
இதையடுத்தது, ஓட்டலுக்குள் நுழைந்த போலீஸார் அங்கு பதுங்கியிருந்த ரவுடியான அரக்கோணம் ஜெயபால் மற்றும் அவரது கூட்டாளி நெல்லையைச் சேர்ந்த சொக்கலிங்கம் உட்பட மொத்தம் 17 ரவுடிகளை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 கைத்துப்பாக்கிகள், 14 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்தாண்டு சென்னை பட்டினப்பாக்கத்தில் பிரபல ரவுடியான ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தற்போது கைதான ஜெயபால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த மாதம் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த அவர், கூட்டாளிகளுடன் சேர்ந்து எதிராளியை தீர்த்துக் கட்ட சதித்திட்டம் தீட்டக் கூடியபோது கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பிடிபட்ட அனைவரிடமும் தனித்தனி இடங்களில் வைத்து போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் 17 ரவுடிகள் கூண்டோடு கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.