கடலூர்: கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் ரயில் கொள்ளையர்கள் 4 பேர் கைது செய்யப் பட்டனர்.
விழுப்புரம் ரயில்வே காவல் வட்ட இன்ஸ்பெக்டர் நிதிஷ்குமார் தலைமையில் கடலூர், விழுப்புரம் ரயில்வே போலீஸார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் மாலை நெல்லிக்குப்பம் ரயில் நிலைய பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அப் பகுதியில் ரயில் கொள்ளை யர்கள் சிலர், நெல்லிக்குப்பம் அருகே உள்ள சோழவல்லி கிராமத்தில் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்து.
இதையடுத்து, போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று அங்கிருந்த சோழவல்லி புதுதெருவைச் சேர்ந்த சிற்றரசன்(22), ஆனஸ்ட் ராஜ் (23), புதிய சோழவல்லி திடீர் குப்பத்தைச் சேர்ந்த ராஜ் (23), ராஜ் நைனார் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (35) ஆகியோரைக் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர்.
அவர்களிடமிருந்து 12 பவுன், ஒரு பைக், 4 செல்போன்களை பறிமுதல் செய்தனர். பிடிபட்ட 4 பேரையும் கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.