புதுச்சேரி: புதுச்சேரியில் போக்சோ வழக்கில், வாகன ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மினாமூரைச் சேர்ந்தவர் ஜாகீர் ஹூசைன் ( 41 ). இவர் புதுச்சேரியில் டிராவல்ஸ் நிறுவனத்தில் ஓட்டுநராக இருந்தார். இவர் கடந்த 2021-ம் ஆண்டு புதுச்சேரி ஒதியன் சாலைப் பகுதியில் 11 வயதுச் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் ஜாகீர் ஹூசைனை கைது செய்தனர்.
அவர் மீதான வழக்கின் விசாரணை புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி ஷோபனா தேவி நேற்று தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஜாகீர் ஹூசைனுக்கு போக்சோ சட்டம் 6-வது பிரிவின் கீழ் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், போக்சோ பிரிவு 12-ன் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தார்.
தண்டனையை ஒரே நேரத்தில் அனுபவிக்கவும், அத்துடன் ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்தார். பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க அரசுக்கு நீதிபதி பரிந்துரைத்தார். நீதிமன்ற உத்தரவை அடுத்து ஜாகீர் ஹூசைன் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் அரசுத் தரப்பில் வழக்கறிஞர் பச்சையப்பன் ஆஜரானார்.