சென்னை: நுங்கம்பாக்கத்தில் தொழில் அதிபர் வீட்டில் ரூ.12 லட்சம் ரொக்கம் மற்றும் 40 பவுன் நகை கொள்ளை போனது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை நுங்கம்பாக்கம், முரளி தெருவில் வசிப்பவர் குப்புராஜ். இவரது நெருங்கிய உறவினர் நல்லதம்பி. இருவரும் இணைந்து கோவை, திருப்பூர் சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மாதம் இருவரும் கோவை சென்றுள்ளனர். குப்புராஜ் பணி நிமித்தமாக கோவையிலேயே உள்ளார். இந்நிலையில், இவர்களது சென்னை நிறுவனத்தில் பணியாற்றும் சந்திரன் என்பவர் அடிக்கடி வந்து வீட்டை பார்த்துவிட்டு செல்வாராம்.
இந்நிலையில், வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து குப்புராஜூக்கு தகவல் தெரிவித்தார்.
அவர் அங்கிருந்தவாறே நுங்கம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். முதல் கட்ட விசாரணையில் ரூ.12 லட்சம் ரொக்கம் மற்றும் 40 சவரன் நகை கொள்ளை போனது தெரியவந்துள்ளது. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் குற்றவாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர்.