புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே இறால் பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.111 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
ஆவுடையார்கோவிலை அடுத்த மீமிசல் அருகேயுள்ள வேங்காங்குடி பகுதியில் இருந்துஇலங்கைக்கு படகு மூலம் கடத்திச் செல்வதற்காக போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, திருச்சி, ராமநாதபுரம் சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, வேங்காங்குடியில் உள்ள இறால் பண்ணையில் நேற்று முன்தினம் மாலை சுங்கத் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
ஆள் நடமாட்டம் மற்றும் மின் இணைப்புகூட இல்லாமல், தகர ஷீட்டுகளால் ஆன கொட்டகையில் இருந்த பூட்டை உடைத்து, உள்ளே சென்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு அதிக பார்சல்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை சோதனையிட்டபோது, ரூ.110 கோடி மதிப்பிலான 100 கிலோ ஹாஷிஷ் எனும்போதைப் பொருளும், ரூ.1.05 கோடிமதிப்பிலான 876 கிலோ கஞ்சாவும் இருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து, அவற்றைப் பறிமுதல் செய்த சுங்கத் துறையினர், அவற்றை ராமநாதபுரத்தில் உள்ள சுங்கத் துறை அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒப்படைத்தனர். அதில் இருந்து மாதிரி எடுத்து, சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
வேங்காங்குடி கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலையோரமாகஉள்ள இந்த இறால் பண்ணையை, ஒரு மாதத்துக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்த அமீர் சுல்தான்(50) என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்துள்ளார். ஆனால், அங்கு இறால் பண்ணை பெரிய அளவில் செயல்படவில்லை என்று கூறப்படுகிறது.
சுங்கத் துறையினர் ஆய்வுக்குச் சென்றபோது இறால் பண்ணையில் யாரும் இல்லை. இதையடுத்து, தலைமறைவாக உள்ளஅமீர் சுல்தானை சுங்கத் துறையினர்தேடி வருகின்றனர். மேலும், இறால்பண்ணையின் காவலாளியான மீமிசல் அருகே உள்ள அரசநகரிபட்டினத்தைச் சேர்ந்த முஜிபுர் ரஹ்மான்(55) உள்ளிட்ட 3 பேரைசுங்கத் துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை பல்வேறு இடங்களில் இருந்து, வெவ்வேறு வகையான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு இருந்தாலும், ரூ.111 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.