க்ரைம்

சென்னை | கல்லூரி மாணவர்கள், ஐ.டி ஊழியர்களை குறிவைத்து வெளிநாட்டு இ-சிகரெட் விற்ற 6 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட இ-சிகரெட்களை சட்ட விரோதமாகப் பதுக்கி வைத்து கல்லூரி மாணவர்கள், ஐ.டி. ஊழியர்கள், இளைஞர்களைக் குறிவைத்து சிலர் விற்பனை செய்து வருவதாக வட சென்னை காவல் கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க்குக்கு ரகசியத்தகவல் கிடைத்தது.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க பூக்கடை காவல் துணைஆணையர் ஸ்ரேயா குப்தா தலைமையிலான தனிப்படை போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, அந்த தனிப்படை போலீஸார் கடந்த 9-ம் தேதி அண்ணாநகர் பகுதியிலுள்ள ஒரு கடையில் சோதனை நடத்தினர்.

அப்போது, அங்கு வெளிநாட்டு இ-சிகரெட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததாக சேத்துப்பட்டு முகமது ஆஷிக் (31), புரசைவாக்கம் அப்துல் (20) ஆகிய இருவரைக் கைது செய்தனர். மேலும், வடக்கு கடற்கரை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் பாரிமுனை, பர்மா பஜார் பகுதியிலுள்ள கடைகளைக் கண்காணித்து சோதனை நடத்தினர்.

அப்போது அங்குள்ள கடைகளில் வெளிநாட்டு இ-சிகரெட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததாக பாரிமுனை யாஷ்மின் ராஜா (35), வியாசர்பாடி அப்துல் கரீம் (25), மண்ணடி அப்துல்லா (34), அதே பகுதி சையது அபுதாகீர் (36) ஆகிய மேலும் 4 பேரைக் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து பல்வேறு நாடுகளிலிருந்து கடத்தி வரப்பட்ட 1,312 இ-சிகரெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

SCROLL FOR NEXT