ராமநாதபுரம்: பரமக்குடி அருகே உத்தர பிரதேச பெண் தாக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகார் உண்மைக்குப் புறம்பானதாக தெரிய வருகிறது என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஷிப்ரா பதக் ( 39 ), நதிகள், மலைகள், சுற்றுச்சூழல் ஆகியவற்றின் பாதுகாப்பு மற்றும் அதன் மரபுகளை பேணிக் காப்பதை வலியுறுத்தி, அயோத்தியிலிருந்து தனது தாய், தந்தை மற்றும் குடும்பத்தினருடன் யாத்திரையாக ராமேசுவரம் நோக்கி வந்தார். கடந்த 8-ம் தேதி பரமக்குடியிலிருந்து ராமேசுவரம் நோக்கி காரில் வந்த போது, சத்திரக்குடி அருகே தனது காரையும், குடும்பத்தினர் வந்த காரையும், ஒரு காரில் வந்த மர்ம நபர்கள் சேதப்படுத்தி, தன்னையும் தாக்கியதாக பரமக்குடி டிஎஸ்பியிடம் புகார் அளித்தார்.
அதனடிப்படையில், பரமக்குடி போலீஸார் விசாரணை செய்து வந்தனர். ஷிப்ரா பதக் இந்நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வந்த உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஷிப்ரா பதக் தான் தாக்கப்பட்டது தொடர்பாக அளித்த புகாரின் பேரில், பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக, பரமக்குடி டிஎஸ்பி ( பொறுப்பு ) நிரேஷ் தலைமையில் 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப் பட்டது. முதல் கட்ட விசாரணையில் கிடைத்த வெவ்வேறு ஆதாரங்களின் அடிப்படையில், ஷிப்ரா பதக் கொடுத்த புகார் உண்மைக்குப் புறம்பானது எனத் தெரியவருகிறது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.