கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களால் குழந்தைகள் கடத்தப்படுவதாக சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பியவரை, உத்தனப்பள்ளி போலீஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நாகனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த முனியப்பாஎன்பவரின் மகன் கிருஷ்ணப்பா(43), கடந்த 7-ம் தேதிஅவரது வாட்ஸ்அப் எண்ணிலிருந்து, வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் குழந்தைகளைக் கடத்துவதாக வதந்தி பரப்பியுள்ளார்.
இது தொடர்பாக உத்தனப்பள்ளி போலீஸார் வழக்கு பதிவு செய்து, கிருஷ்ணப்பாவை கைதுசெய்து, சிறையில் அடைத்துள்ளனர். இதுபோல தவறான செய்திகளைப் பரப்புவோர் மீதும்,வதந்தியை நம்பி வடமாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்தும் நபர்கள் மீதும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.