சென்னை: நுங்கம்பாக்கத்தில் பள்ளி சிறுவனை மர்ம நபர் ஒருவர் கடத்த முயன்றதாக பெற்றோர் கொடுத்த புகாரில் உண்மை இல்லை என காவல்துறை இணை ஆணையர் தர்மராஜ் விளக்கமளித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் பள்ளி சிறுவனை கடத்த முயற்சித்ததாக பெற்றோர் கொடுத்த புகார் குறித்து, சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் காவல் இணை ஆணையர் தர்மராஜ் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: நுங்கம்பாக்கத்தை சேர்ந்த 11 வயதான கார்த்திக் என்ற சிறுவனின் தாயார் யோகலட்சுமி என்பவர் கடந்த 8-ம் தேதி மாலை சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
அதில், பள்ளி முடிந்து தனது மகன் வீட்டுக்கு வரும் போது, வழியில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், சிறுவனை வழி மறித்து கடத்த முயன்றதாக தெரிவித்திருந்தார். இது குறித்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி இருந்தது. இதையடுத்து, உடனடியாக காவல் துறை சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு சென்று ஆய்வு செய்தது.
மேலும், அந்த புகாரை விசாரணைக்கு எடுத்தது மட்டும் அல்லாமல், இதன் உண்மை தன்மையை அறிவதற்காக 40 பேர் அடங்கிய 8 பிரத்யேக போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து விசாரணை நடத்தினோம். விசாரணையில், பள்ளி முடிந்து வந்த சிறுவனை, மதுபோதையில் இருந்த நபர் ஒருவர் வழிமறித்துள்ளார்.
விசாரணையில் அம்பலம்: இதனால், அச்சமடைந்த சிறுவன் வேறு வழியாக வீட்டுக்கு சென்று, தனது தாயிடம், தன்னை இருசக்கர வாகனத்தில் நபர் ஒருவர் வழிமறித்து, அவரது வண்டியில் ஏற சொன்னதாக தெரிவித்துள்ளார். ஆனால், சிறுவனை யாரும் வழி மறித்து வண்டியில் ஏற சொல்லவில்லை என்பது விசாரணையில் தெரிந்தது. மதுபோதையில் வந்த நபரை கண்ட பதற்றத்தில் சிறுவன் அவ்வாறு சொல்லி இருக்கிறார். எனவே, சிறுவன் கொடுத்த புகாரில் உண்மை இல்லை.
மேலும், சமீபகாலமாக இதுபோன்ற குழந்தை கடத்தல் தொடர்பாக அச்சுறுத்தும் விதமாக சமூக வலை தளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. எனவே, இது போன்ற தகவல்கள் கிடைத்தால் போலீஸாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். காவல் துறை சார்பில் அதன் உண்மை தன்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
குழந்தை கடத்தல் தொடர்பாக தவறான தகவல் பரப்பினால் சம்பந்தப்பட்டவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகள் இது தொடர்பாக ஏதேனும் பெற்றோரிடம் புகார் தெரிவித்தால், பெற்றோர் அதை முதலில் காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.