சென்னை: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வரும் ஜாபர் சாதிக், வெளிநாடுகளுக்கு சென்று வந்த பின்னணி மற்றும் எத்தனை முறை யாருடன் சென்றார் என்பன போன்ற விவரங்களை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் சேகரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: டெல்லியில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்தவருமான ஜாபர் சாதிக் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, அவர் தலைமறைவானார். வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அவரது 8 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன. மேலும், ஜாபர்சாதிக் வீட்டுக்கு வந்து சென்றவர்களின் விபரங்களை வீட்டில் இருந்த சிசிடிவி பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.
இதில் சினிமா பிரபலங்கள், நண்பர்கள், அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள், தொழில் அதிபர்கள், முகவர்கள் என பல்வேறு தரப்பினர் ஜாபர் சாதிக்கின் வீட்டுக்கு வந்து சென்றது தெரியவந்துள்ளது. அவர்களின் பட்டியலை டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் தயாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் தேடப்பட்டு வரும் ஜாபர் சாதிக், அடிக்கடி கென்யா நாட்டுக்கு பயணம் மேற்கொண்டது தெரியவந்துள்ளது. குறிப்பாக, கடந்த மாதம் 17-ம் தேதிக்கு முன்பாக ஜாபர் சாதிக், கென்யாவுக்கு சென்று வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், அந்த தேதியில் ஜாபர் சாதிக் உடன் கென்யா சென்ற நபர்கள் யார் என்பது குறித்த விவரங்களையும் சேகரித்து, அவர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர அதிகாரிகள்திட்டமிட்டுள்ளனர். கென்யா நாட்டுக்கு போதைப் பொருள் வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்காக சென்றார்களா என்ற கோணத்திலும் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதுமட்டும் அல்லாமல் ஜாபர் சாதிக் இதுவரை எத்தனை முறை வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார், அதன் நோக்கம் என்ன, உடன் சென்றவர்கள் யார் யார் என்ற தகவலும் சேகரிக்கப்பட்டு பட்டியலிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டில் ஒட்டியிருந்த சம்மன் நோட்டீஸை சிலர் கிழித்து விட்டு, வீட்டுக்கும் புது பூட்டு போட்டு பூட்டி விட்டு தப்பிச் சென்றதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவலை போலீஸார் மறுத்து விட்டனர்.
ஜாபர் சாதிக் சகோதரர் விசிகவில் இருந்து நீக்கம்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் பொறுப்பு வகித்துவரும் ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் அக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக விசிக மாநிலச் செயலாளர் ஞான.தேவராஜ் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய சென்னை மண்டல துணைச் செயலாளர் அ.முகமது சலீம், கட்சியின் நன்மதிப்புக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருவதால் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்து நீக்கப்படுகிறார். இவருடன் கட்சிரீதியாக யாரும் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.