க்ரைம்

பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறை @ புதுக்கோட்டை

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: தூத்துக்குடி மாவட்டம் மட்டக்கரை அருகேயுள்ள ராமநாடார் வில்லைத் தெருவைச் சேர்ந்தவர் ஜெ.வென்ஷீலிக் இஸ்ரேல் பிண்டு ( 31 ). இவர், புதுக்கோட்டை ராம் தியேட்டர் பகுதியில் குடும்பத்தினருடன் தங்கி, தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.

இவர், 2022-ல் தனது வீட்டுக்கு டியூசனுக்கு வந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். குறிப்பாக, ஒரு மாணவியிடம் பல முறை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து தகவலறிந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்த குமார் ( 43 ) அளித்த புகாரின் பேரில், புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸார் வென்ஷீலிக் இஸ்ரேல் பிண்டுவைக் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், வென்ஷீலிக் இஸ்ரேல் பிண்டுவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதம், அபராதத் தொகையை கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி ஜெயந்தி நேற்று தீர்ப்பளித்தார்.

அரசுத் தரப்பில் வழக்கறிஞர் யோகமலர் ஆஜரானார். இவ்வழக்கை முறையாக விசாரித்த அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கலைவாணி மற்றும் போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே பாராட்டினார்.

SCROLL FOR NEXT