மதுரை: மதுரையில் ஓடும் ரயிலில் ரூ.50 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிக்கிய நபருக்கு சர்வதேச கடத்தல் கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் இருந்து செங்கோட்டைக்கு தினமும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மதுரை ரயில் நிலையத்துக்கு அதிகாலை 4.30 மணிக்கு வந்தடைகிறது. நேற்று அந்த ரயிலில் சென்னையில் இருந்து பயணித்த ஒருவர், மதுரை ரயில் நிலையத்தில் வந்து இறங்கினார். அவரை மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் (டிஆர்ஐ) சுற்றி வளைத்து பிடித்தனர். அவர் வைத்திருந்த இரண்டு பேக்குகளை ஆய்வு செய்தபோது, பொட்டலங்கள் வடிவில் போதைப்பொருட்கள் இருப்பது தெரிந்து கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
மத்திய வருவாய் புலனாய்வுத்துறையினர் அவரிடம் விசாரித்த போது, அவர் சென்னை தேனாம்பேட்டை பகுதியிலுள்ள கண்ணதாசன் நகரிலுள்ள அபிராமி அவென்யூ பகுதியைச் சேர்ந்த இனியாஸ் என்பவரின் மகன் பிள்ளமண்ட் பிரகாஷ் (42) எனத் தெரியவந்தது. அவரது இரண்டு பேக்கில் தலா 15 பொட்டலங்களாக போதைப்பொருட்கள் மற்றும் போதைப்பொருள் தயாரிக்க உதவும் ரசாயன பவுடர்கள் என சுமார் 30 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்து மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் கூறியது: “கடந்த சில நாட்களுக்கு முன்பு குஜராத் கடல் பகுதியில் ஈரானிலிருந்து கப்பல் மூலம் கடத்தப்பட்டு வந்த சுமார் ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் 150 கிலோவிற்கு மேலாக மெத்தப்பெட்டமைன் போதைப்பொருளும் இருந்ததாக கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக 5 பேர் கொண்ட கும்பலை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர். இக்கும்பலுக்கு தமிழகத்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதும் தெரிந்தது. தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த ஜாபர் சாதிக் உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை டெல்லி போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் தேடுகின்றனர்.
கடந்த ஒரு வாரத்துக்கு முன் மதுரை கே.கே.நகர் பகுதியில் இளையான்குடியைச் சேர்ந்த தமிமுன் அன்சாரி என்பவரது வீட்டிலும் மெத்தப்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். அவரது தகவலின் பேரில் சென்னையைச் சேர்ந்த அருண், அன்பு ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக கருதி அவர்களை தேடுகின்றனர்.
இந்நிலையில், மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருள் கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சென்னை- செங்கோட்டை ரயிலில் பயணித்த மத்திய வருவாய் புலனாய்வுத்துறையின் (டிஆர்ஐ) மதுரை யூனிட் அதிகாரிகள் அதே ரயிலில் போதைப்பொருள் கடத்திய பிள்ளமண்ட் பிரகாஷை பிடித்தனர்.
அவரிடம் இருந்து கைப்பற்றிய 30 கிலோ போதைப்பொருள் சர்வதேச சந்தையின் மதிப்பு ரூ. 50 கோடிக்கு அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. மதுரை ரயில்வே பாதுகாப்பு படை பிரிவில் வைத்து பிரகாஷ் விசாரிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து அவரிடம் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரிக்கின்றனர். சென்னையில் இருந்து மதுரைக்கு கடத்தி வரப்பட்ட இந்த போதைப்பொருள் ராமேஸ்வரம் வழியாக இலங்கை கடத்த முயற்சித்து இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அந்த கோணத்திலும் விசாரிக்கப்படுகிறது.
தமிழக கடலோர பகுதி வழியாக போதைப்பொருட்களை பிற நாடுகளுக்கு எளிதில் கடத்த முடியும் எனத் திட்டமிட்டு இருக்கலாம் என்றும், மதுரையில் சிக்கிய நபருக்கும், சர்வதேச போதைப்பொருள் கடத்த கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுகிறது" என்று தெரிவித்தனர்.