மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகேவுள்ள தருமபுரம் ஆதீன மடத்தின் 27-வது குருமகா சந்நிதானமாக இருப்பவர் ல மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள். இவரது சகோதரரும், உதவியாளருமான விருத்தகிரி என்பவர் மயிலாடுதுறை எஸ்.பி. அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையைச் சேர்ந்த வினோத், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் ஆகியோர் செல்போன் மூலம் தொடர்புகொண்டு, தலைமை மடாதிபதி தொடர்புடைய ஆபாச வீடியோ, ஆடியோ உள்ளதாகவும், கேட்கும்பணத்தை கொடுக்காவிட்டால்,அவற்றை தொலைக்காட்சிகளிலும், சமூக ஊடகங்களிலும் வெளியிட்டு விடுவோம் என்றும் மிரட்டி வருகின்றனர்.
மேலும், போலீஸாரிடம் சென்றால், திருவெண்காடு சம்பா கட்டளையைச் சேர்ந்த ரவுடி விக்னேஷ் உள்ளிட்டோரைக் கொண்டு மடத்தில் உள்ளவர்களை கொலை செய்யக்கூட தயங்கமாட்டோம் என்றுமிரட்டினர். நேரிலும் சிலமுறை சந்தித்து மிரட்டி, கழுத்தை நெரித்துக் கொல்ல முயன்றனர். இதனால் உயிருக்குப் பயந்து, மடத்தில் உள்ளவர்களிடம் பணம்பெற்றுத் தருவதாகத் தெரிவித்தேன்.
பின்னர், இது தொடர்பாக செம்பனார்கோவில் கலைமகள் கல்விநிறுவனங்களின் தாளாளர் குடியரசு,செய்யூர் வழக்கறிஞர் ஜெயச்சந்திரன், பாஜக மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் அகோரம், திருக்கடையூர் விஜயகுமார் ஆகியோரின் தூண்டுதலின் பேரில், வினோத், ரவுடி விக்னேஷ் ஆகியோர் தொடர்புகொண்டு, கேட்கும் தொகையை விரைவில் கொடுக்க வேண்டும் என மீண்டும் மிரட்டினர்.
மடாதிபதியின் நேர்முக உதவியாளரான செந்திலும் அவர்களுக்குஉடந்தையாக உள்ளார். இதனால்,மடாதிபதியும், மடத்தில் உள்ளோரும் மன உளைச்சலுடன் உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, வினோத், செந்தில், விக்னேஷ், குடியரசு, ஜெயச்சந்திரன், விஜயகுமார், அகோரம் ஆகிய 7 பேர் மீது மயிலாடுதுறை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் நெய்க்குப்பையைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ்(28), பிரபாகர் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, குடியரசு(40), ஸ்ரீநிவாஸ்(28), வினோத்(32), விக்னேஷ்(33) ஆகியோரை தனிப்படைபோலீஸார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். பாஜக மாவட்டத் தலைவர் அகோரம் உள்ளிட்டோரைத் தேடி வருகின்றனர்.
மற்றொரு மனு: இதனிடடையே தருமபுரம் ஆதீனகர்த்தரின் சகோதரர் விருத்தகிரி நேற்று எஸ்.பி. அலுவலகத்தில் அளித்துள்ள மற்றொரு மனுவில், ‘‘நான் ஏற்ெகனவே கொடுத்த புகார்மனுவில் குறிப்பிட்டுள்ள திருக்கடையூர் விஜயகுமார், இந்த விவகாரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்துள்ளார். எங்களை மிரட்டிய நபர்களிடம் பேசி, பிரச்சினையை சுமுகமாக தீர்க்க முயற்சிஎடுத்தார். அதுபலன் அளிக்கவில்லை. இதனால், அவரது யோசனைப்படி தங்களிடம் புகார் அளித்தேன். அவருக்கு இந்த வழக்கில் வேறு எந்த தொடர்பும் இல்லை’’ எனத் தெரிவித்துள்ளார்.
முதல்வருக்கு ஆதீனம் நன்றி: தருமபுரம் ஆதீனகர்த்தர் நேற்றுமாலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘மடத்தில் உள்ளவர்களை ரவுடிகளுடன் சேர்ந்து சிலர் மிரட்டிய விவகாரத்தில், தமிழக முதல்வரின் உத்தரவுப்படி, காவல் துறையினர் துரித நடவடிக்கை எடுத்து, எங்களையும், எங்கள் மடத்தின் பெருமையையும் காப்பாற்றியுள்ளனர்.
தருமபுர மடத்தையும், எங்களையும் ரவுடிகளிடமிருந்து மீட்டெடுத்ததமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், காவல் துறைக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.