பந்தநல்லூர்: திருவிடைமருதூர் வட்டம், பந்தநல்லூர், நெய்குண்ணத்தில் முன்விரோதம் காரணமாக தொடர்ந்து வைக்கோல்களை தீயிட்டு கொளுத்தி, அதன் அருகில் உள்ள சுவற்றில் எழுதியவர்களை தேர்வு எழுத வைத்து குற்றம் செய்த இரண்டு பேரை டிஎஸ்பி கைது செய்துள்ளார்.
நெய்குண்ணம், பிரதானச் சாலையைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் ஜெயபிரகாஷ்(23), அதே பகுதியைச் சேர்ந்தவர் குமார் மகன் பிரகாஷ்(26). 2 பேரும் நெருங்கிய நண்பர்கள். இந்த நிலையில், அண்மைக்காலமாக இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அவர்களது சமூகத்தைச் சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக வைக்கோல் போர்களை தீயிட்டு கொளுத்தி வந்தனர்.
வழக்கம் போல் கடந்த 20-ம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த அருண் என்பவரது வீட்டின் பின்புறம் இருந்த வைக்கோல் போரை மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்தி விட்டு, அதன் அருகில் உள்ள சுவற்றில், ‘தெடரும்’ என தவறாக எழுதி விட்டு மீண்டும் அதன் கீழ் ‘தொடரும்’ என சரியாக எழுதி விட்டுச் சென்றனர். இதுதொடர்பாக அருண் பந்தநல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், திருவிடைமருதூர் டிஎஸ்பி ஒய்.ஜாபர் சித்திக், அதே பகுதியைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட இளைஞர்களை பந்தநல்லூர் காவல் நிலையத்திற்கு வரவழைத்து, அந்த இளைஞர்களுக்கு ‘தொடரும்’ என்ற வார்த்தை அதிகமாக வரக்கூடிய வகையில் தேர்வு எழுத வைத்தார். பின்னர், அவர்களை அனுப்பி வைத்து விட்டு,சுவற்றில் எழுதியுள்ள எழுத்துக்களும், தேர்வு எழுதியவர்களின் எழுத்துக்களும் ஒத்துப்போகிறதா என போலீஸார் ஆய்வு மேற்கொண்டனர். அதில் ஜெயபிரகாஷ் மற்றும் பிரகாஷ் ஆகிய 2 பேர் தான் அந்த எழுத்துக்களை எழுதியது தெரிய வந்ததையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.