க்ரைம்

சென்னையில் தனியாக நடந்து செல்பவர்களை குறிவைத்து 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர் வழிப்பறி: 3 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: தனியாக நடந்து செல்பவர்களை குறிவைத்து அசோக் நகர், கே.கே. நகர், வடபழனி உட்பட சென்னையில் 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் கத்திமுனையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டதாக பிரபல கொள்ளையர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:சென்னை ராமாபுரம், பாரதி சாலை, கண்ணகி தெருவைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (52). இவர் கடந்த 25-ம்தேதி காலை, வீட்டினருகே, ராமாபுரம், வள்ளுவர் சாலை சந்திப்புஅருகே நடந்து சென்று கொண்டிருந்தார். ஆள் நடமாட்டம் இல்லாத அந்த பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர், ரவிச்சந்திரனை கத்திமுனையில் மிரட்டி,அவர் வைத்திருந்த பணம் மற்றும் செல்போனை பறித்துவிட்டுத் தப்பினர்.

கத்திமுனையில்.. அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து ராமாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்துவிசாரணை நடத்தினர். சம்பவஇடத்தைச் சுற்றி பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் ரவிச்சந்திரனிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக ராமாபுரம் செந்தமிழ் நகர் கஜேந்திரன் (20), அதேபகுதி மணிகண்டன் (18), போரூர் கொளப்பாக்கம் விக்னேஷ்குமார் (20), ஆகிய 3 பேரைக் கைது செய்தனர்.

விசாரணையில் கைது செய்யப்பட்ட 3 பேரும் ராமாபுரம், பரங்கிமலை, மாங்காடு, அசோக் நகர், கே.கே. நகர், கோயம்பேடு, வடபழனி, கிண்டி மற்றும் வளசரவாக்கம் ஆகிய காவல் நிலைய எல்லைப்பகுதிகளில் இருசக்கர வாகனத்தில்சென்று கத்திமுனையில் செல்போன் மற்றும் பணப்பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 11 செல்போன்கள் மற்றும் குற்றச் செயலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT