தேவகோட்டை: 5 பேரை கொடூரமாகத் தாக்கி கொள்ளை அடித்த வழக்கில் குற்றவாளியை கோட்டை விட்ட தேவகோட்டை குற்றப்பிரிவு தனிப்படை கலைக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கல்லுவழியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை கொடூரமாக தாக்கி கொள்ளையடித்த வழக்கில் தேவகோட்டை அருகேயுள்ள தென்னீர்வயலைச் சேர்ந்த தினேஷ்குமாரை ( 32 ) தனிப்படை போலீஸார் பிடித்து விசாரித்து வந்தனர். அவரை நேற்று முன்தினம் மாலை கொள்ளைக்கு பயன்படுத்திய இரும்பு ராடை எடுப்பதற்காக தனிப்படையினர் தேவகோட்டை அருகேயுள்ள தென்னீர்வயல் முத்தூரணிக்கு அழைத்து வந்தனர்.
தினேஷ் குமார் இரும்பு ராடை எடுத்ததும் எஸ்ஐ சித்திரை வேல், தலைமை காவலர் ரவிச்சந்திரன் ஆகிய இருவரையும் தாக்கிவிட்டு தப்ப முயன்றார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஆடிவேல் அவரது காலில் சுட்டு பிடித்தார். காயமடைந்த தினேஷ் குமார் மதுரை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.
தினேஷ் குமாருக்கு ஏற்கெனவே 2020 ஜூலை 13-ம் தேதி கல்லுவழி அருகேயுள்ள முடக்கூரணியில் ராணுவ வீரரின் மனைவி, அவரது தாயாரை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்து நகைகளை கொள்ளையடித்தது, 2023-ம் ஆண்டு ஜன.10-ம் தேதி தேவகோட்டை அருகே கண்ணங் கோட்டையில் தாய், மகளை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த வழக்கிலும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
கண்ணங்கோட்டை வழக்கு விசாரணையின் போதே தேவகோட்டை உள்கோட்ட குற்றப் பிரிவு போலீஸார் தினேஷ் குமாரை பிடித்து விசாரித்துள்ளனர். ஆனால், முறையாக விசாரிக்காமல் விட்டு விட்டனர். இதனால் கல்லுவழியில் அடுத்த கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. மேலும் கல்லுவழி வழக்கு விசாரணையிலும் தேவகோட்டை உட்கோட்ட குற்றப் பிரிவு போலீஸார் தினேஷ்குமாரிடம் முறையாக விசாரிக்க வில்லை.
இந்நிலையில், டிஐஜி துரை அமைத்த இன்ஸ்பெக்டர் ஆடி வேல், எஸ்ஐகள் சித்திரவேல், மலைச்சாமி, தலைமைக் காவலர் ரவிச்சந்திரன், காவலர்கள் கருப்புச்சாமி, சுரேஷ், பாண்டி ஆகியோரை கொண்ட தனிப்படையினர் தினேஷ் குமாரை பிடித்தனர். இதையடுத்து முறையாக விசாரிக்காத 6 பேர் கொண்ட தேவகோட்டை குற்றப்பிரிவு தனிப்படை கலைக்கப்பட்டது.