க்ரைம்

வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு: சிறுவன் உட்பட 2 பேர் கைது

செய்திப்பிரிவு

தென்காசி: குற்றாலம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம், 4 பவுன் நகையை பறித்துச் சென்ற சிறுவன் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி மாவட்டம் மேலகரம் ஸ்டேட் வங்கி காலனி பகுதியைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி(32). இவர் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, பேரூராட்சியில் இருந்து வருவதாக கூறிய இளைஞர் ஒருவர், புவனேஸ்வரியின் வீட்டு குடிநீர் இணைப்பில் மின் மோட்டார் பொருத்தப்பட்டு உள்ளதா? என ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அதற்கு புவனேஸ்வரி, தனது கணவர் வீட்டில் இல்லாததால் பின்னர் வருமாறு கூறியுள்ளார். மீண்டும் மாலையில் அந்த நபர்,மேலும் ஒருவரை உடன் அழைத்துவந்துள்ளார். மின் மோட்டாரை அகற்ற வேண்டும் என்று கூறி, புவனேஸ்வரியின் வீட்டுக்குள் சென்றுள்ளனர். அப்போது புவனேஸ்வரி அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்துக்கொண்டு, அவரை ஓர் அறையில் தள்ளிபூட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

தொலைபேசி மூலம் எதிர்வீட்டுப் பெண்ணை தொடர்புகொண்ட புவனேஸ்வரி, கதவைத் திறந்து வெளியே வந்துள்ளார். பின்னர், குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில், சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த மாரிச்செல்வம்(23) மற்றும்அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகியோர் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் போலீஸார் கைது செய்து நகையை மீட்டனர்.

SCROLL FOR NEXT