சென்னை: பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் மோதலில் ஈடுபட்ட விவகாரத்தில் மேலும் 3 மாணவர்களை ரயில்வே போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னையில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் பயணம் செய்யும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிலர், ரயில்களின் படியில் தொங்கியபடியும், ரயிலின் ஜன்னல் பகுதியில் நின்று கொண்டும் சாகசப் பயணத்தில் ஈடுபடுகின்றனர்.
பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 12-ம் தேதியில், பச்சையப்பன் கல்லூரி, மாநில கல்லூரிகளை சேர்ந்த 60 பேர் கற்கள் மற்றும் பாட்டில்களால் தாக்கிக் கொண்டனர். இது, ரயில் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிரந்தரமாக நீக்க பரிந்துரை: இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட 60 மாணவர்களையும் கல்லூரியிலிருந்து நிரந்தரமாக நீக்க பரிந்துரை செய்து இரு கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் ரயில்வே காவல் துறை கடிதம் அனுப்பியது. மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்ட போது சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோ காட்சியை வைத்து, ரயில்வே போலீஸார் மாணவர்களை அடையாளம் கண்டு கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மேலும் 3 மாணவர்களை ரயில்வே போலீஸார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து ரயில்வே காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது: பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் இரு கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்ட விவகாரத்தில், 60 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 10 பேரை அடையாளம் கண்டு, தேடும் பணியை மேற்கொண்டோம்.
இதில், தற்போது 3 மாணவர்களை கைது செய்துள்ளோம். வீடியோவை வைத்து, மற்ற மாணவர்களையும் தேடி வருகிறோம். மாணவர்கள் படியில்பயணம் செய்வதைத் தவிர்க்கவேண்டும். மின்சார ரயில்களில் பயணிக்கும் போது, மற்றவர்களுக்கு இடையூறு செய்ய வேண்டாமென தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மீறினால், மாணவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.