க்ரைம்

சென்னை விமான நிலையத்தில் ரூ.7 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்: புதுச்சேரி நபருக்கு வலை

செய்திப்பிரிவு

சென்னை: பாங்காக்கில் இருந்து சென்னைக்கு வரும் தாய் ஏர்வேஸ் விமானத்தில் ஒரு பயணியின் சூட்கேசில் போதைப் பொருள் இருப்பதாக தாய்லாந்து அதிகாரிகள் ரகசிய தகவல் அனுப்பியிருந்தனர்.

அதன்படி, சென்னை விமான நிலையத்தில் தாய் ஏர்வேஸ் விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். கன்வேயர் பெல்ட்டில் அனைத்து சூட்கேஸ்களையும் பயணிகள் எடுத்துச் சென்ற பிறகு, ஒரு சூட்கேஸ் மட்டும் எடுக்கப்படாமல் இருந்தது.

இதையடுத்து, அந்த சூட்கேஸை அதிகாரிகள் திறந்து சோதனை செய்ததில், அதில் ரூ.7கோடி மதிப்புள்ள 14 கிலோ பதப்படுத்தப்பட்ட உலகிலேயே மிக உயர்ரக கஞ்சாவான ‘ஹைட்ரோபோனிக்’ இருந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், சூட்கேஸின் டேக்கில் இருந்தமுகவரி குறித்து விசாரித்தனர்.

முதல்கட்ட விசாரணையில், அந்த சூட்கேஸ் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பயணியுடையது என்பது தெரியவந்தது. இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து அந்த நபரை தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT