க்ரைம்

இளைஞரை தாக்கிய உதவி ஆய்வாளர்: விசாரணை நடத்த காவல் உயர் அதிகாரிகள் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: விசாரணை என்ற பெயரில் காவல் நிலையம் அழைத்து இளைஞர் மீது தாக்குதல் நடத்தியதாக காவல் உதவி ஆய்வாளர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளதாவது: சென்னை தி.நகரில் உள்ள டாக்டர் தாமஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (27). அதே பகுதியில் உள்ள துணிக்கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், இவர் அண்மையில் கடைக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த மாம்பலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அன்புதாசனுக்கு, சுரேஷ் மீது சந்தேகம் ஏற்பட்டது.

பைப்பால் தாக்கினர்? - இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி உள்ளார். அப்போது, சுரேஷை கஞ்சா வியாபாரி என நினைத்து, பிவிசி பைப்பால் தோள்பட்டை, தொடை, இரண்டு உள்ளங்கைகளிலும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த சுரேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில், விசாரணை என்ற பெயரில் சுரேஷைத் தாக்கிய உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல் துறை அதிகாரிகள், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.

இது தொடர்பாக போலீஸாரிடம் கேட்டபோது, ‘சம்பந்தப்பட்ட சுரேஷிடமிருந்து 200 கிராம் கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் பாரிமுனையில் ரூ.200-க்கு கஞ்சா பொட்டலங்களை வாங்கி, அதை வெளி நபர்களிடம் ரூ.400 வரை விற்றுள்ளார். இது தொடர்பான விசாரணைக்காகவே காவல் நிலையம் அழைத்தோம் என்றனர். இந்த விவகாரம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT