காரைக்குடி: கேரள மாநிலச் சிறையிலிருந்து தப்பிய தண்டனைக் கைதியை காதலியுடன், காரைக்குடி போலீஸார் கைது செய்தனர். காரைக்குடி பாரதி நகர் முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் அப்சரா (30). கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். மேலும் இவர், காரைக்குடி கல்லூரி சாலையில் பச்சை குத்தும் தொழில் செய்து வருகிறார். இவரது தாயார் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால், அடிக்கடி அங்கு சென்று வந்தார்.
இந்நிலையில் இவருக்கும், போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த ஹர்ஷத் (33) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஹர்ஷத்துக்கு, கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பரில் கேரளா நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
இதையடுத்து, அவர் கண்ணூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்னர், ஹர்ஷத் ஜன.14-ம் தேதி சிறையிலிருந்து தப்பினார். கேரள போலீஸார் அவரை தேடி வந்தனர். மேலும் விசாரணையில், ஹர்ஷத் சிறையில் இருந்தபோதே சட்டவிரோதமாக அப்சராவிடம் பேசி வந்தது தெரியவந்தது.
அதனடிப்படையில், காரைக்குடி வந்த கேரள மாநில போலீஸார், உள்ளூர் போலீஸார் உதவியை நாடினர். காரைக்குடி உதவி எஸ்பி ஸ்டாலின் தலைமையிலான போலீஸார் துப்பாக்கி முனையில், அப்சரா வீட்டின் மாடியில் இருந்த ஹர்ஷத்தை கைது செய்தனர்.
மேலும், சிறையிலிருந்து தப்பிக்கவும், தங்குவதற்கும் உதவிய அவரது காதலி அப்சராவையும் கைது செய்து, கேரள போலீ ஸாரிடம் ஒப்படைத்தனர்.