க்ரைம்

ஆருத்ரா நிறுவன இயக்குநர் ரூசோவின் ஜாமீனை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ரூசோவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் அதிக வட்டி தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் முதலீடுகளைப் பெற்று, 2,438 கோடி ரூபாய் மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கு தொடர்பாக, அந்த நிறுவனத்தில் இயக்குநர்களில் ஒருவரான பாஜக நிர்வாகி ஹரீஷ், இயக்குநர்கள் பாஸ்கர், மோகன்பாபு, ரூசோ உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ரூசோவுக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஜாமீன் வழங்கி நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, ரூசோவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு, நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, அனைவரையும் சரி கட்டி விடுவதாக கூறி ரூசோ மோசடி செய்துள்ளார். எனவே, அவரை ஜாமீனில் விடுவித்தது தவறு. அவர் ஜாமீனில் இருப்பதால் சாட்சிகளை கலைத்துவிடுவார். பாதிக்கப்பட்ட மேலும் பலர் புகாரளிப்பதைதத் தடுக்க வாய்ப்புள்ளது. எனவே, அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

அப்போது ரூசோ தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, காவல் துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதால் ஜாமீனை ரத்து செய்யக் கூடாது என்று வாதிட்டார்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ரூசோவுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், மூன்று நாட்களில் விசாரணை நீதிமன்றத்தில் சரணடையவும், சரணடையவில்லை என்றால் ரூசோவை கைது செய்யவும் காவல் துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT