க்ரைம்

காங்கயம் அருகே 3 பேரை காரில் கடத்தி ரூ.5 லட்சம், 8 பவுன் நகை பறிப்பு: 2 பெண்கள் உட்பட 5 பேர் கைது

செய்திப்பிரிவு

திருப்பூர்: காங்கயம் அருகே நிலத்தரகர் உள்ளிட்ட 3 பேரை காரில் கடத்தி, ரூ.5 லட்சம் பறித்ததாக 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்தவர் கலா (44). நிலம் வாங்கி விற்கும் தரகர். இவருக்கு தொழில் ரீதியாக பரமத்திவேலூரைச் சேர்ந்த சுதா (43) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சுதா கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியைச் சேர்ந்த ஜெகதீஷ் (42) என்பவரை, கலாவுக்கு அறிமுகம் செய்துவைத்தார்.

கடந்த ஆண்டு அக். 21-ம் தேதி ஜெகதீஷ், திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே நிலத்தைப் பார்வையிட கலாவை அழைத்தார். இதை நம்பிய கலாவும், அவரது நண்பர்கள் கிருஷ்ணமூர்த்தி (44), ஓட்டுநர் கார்த்திக் (35) ஆகியோரும், ரூ.5 லட்சத்துடன் காரில் சென்றனர்.

ஈரோடு - பழநி சாலை காங்கயம் வழியாகச் சென்றபோது நள்ளிரவில் காரை மறித்த கும்பல், 3 பேரையும் கடத்தியது. பின்னர், இந்திராணி (48) என்பவர் வீட்டில் அடைத்துவைத்து, ரூ.5 லட்சம், 8 பவுன் நகைகளைப் பறித்துக் கொண்டு, மூவரையும் காரில் ஏற்றி, கொடுவாய் அருகே இறக்கிவிட்டுள்ளது.

இதுகுறித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார், சுதா, இந்திராணி, திருப்பூர் வீரபாண்டி கார்த்திகேயன் (35), பெருந்தொழுவு சந்தோஷ் (34), பாண்டித்துரை (39) ஆகியோரை கைது செய்தனர். மேலும் சிலரைத் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT