அம்பாசமுத்திரம் அருகே சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான ஆட்டோ. 
க்ரைம்

ஆட்டோ கவிழ்ந்து 5-ம் வகுப்பு மாணவர் மரணம்: அம்பாசமுத்திரம் அருகே 10 குழந்தைகள் காயம்

செய்திப்பிரிவு

திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் அருகே ஆட்டோ கவிழ்ந்து 5-ம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த மேலும் 10 குழந்தைகள் காயமடைந்தனர்.

அம்பாசமுத்திரத்திலுள்ள தனியார் பள்ளியில் அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள். இப்பள்ளிக்கு அம்பாசமுத்திரம் அருகே அடையக்கருங்குளம், அகஸ்தியர்பட்டி பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆட்டோக்களில் தினமும் வந்து செல்கிறார்கள். அடையக் கருங்குளத்தில் இருந்து ஓர் ஆட்டோவில் 11 குழந்தைகள் நேற்று காலையில் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தனர். அடையக் கருங்குளத்தை சேர்ந்த சுந்தர் என்பவர் ஆட்டோவை ஓட்டி வந்தார்.

ஓட்டுநரின் அருகே வி.கே.புரத்தை சேர்ந்த சித்திரைநாதன் மகன் பிரதீஷ் ( 10 ) என்ற 5-ம் வகுப்பு மாணவர் அமர்ந்திருந்தார். அகஸ்தியர் பட்டியில் தனியார் ஓட்டல் அருகே ஆட்டோ வந்த போது சாலையின் குறுக்கே நாய் பாய்ந்ததாக கூறப்படுகிறது. ஓட்டுநர் சுந்தர் திடீரென்று பிரேக் பிடித்ததை அடுத்து, கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோரப் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோவுக்கு அடியில் சிக்கிய பிரதீஷ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆட்டோவில் இருந்த மற்ற 10 குழந்தைகளும், ஆட்டோ ஓட்டுநரும் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து வி.கே.புரம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்கள்.

அத்துமீறும் ஆட்டோக்கள்: திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு வரும் ஆட்டோக்களும், வேன்களும் அளவுக்கு அதிகமாக மாணவ, மாணவியரை ஏற்றிச் செல்வதை கண் கூடாக பார்க்க முடியும். ஆட்டோவுக்குள் புளி மூட்டைபோல் மாணவ, மாணவியரையும், அவர்களது புத்தகப் பைகளையும் திணித்துக் கொண்டும், உணவுப் பைகளை இருபுறமும் தொங்க விட்டபடியும் ஏராளமான ஆட்டோக்கள், கண் மூடித்தனமான் வேகத்தில் இயக்கப் படுகின்றன. இதையெல்லாம் போலீஸார் கண்டுகொள்வதே இல்லை.

சாலை பாதுகாப்பு மாதம் கொண்டாடப்படும் நிலையில், அம்பாசமுத்திரத்தில் ஆட்டோ கவிழ்ந்து மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தலைக் கவசம் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளை மறித்து அபராதம் விதிப்பதில் போலீஸார் அதிக அக்கறை செலுத்துகிறார்கள். வாகனங்களில் அளவுக்கு அதிகமாக மாணவ, மாணவியரையும், சரக்கு ஏற்ற பயன்படும் வாகனங்களில் கூலித் தொழிலாளர்களையும் ஏற்றிச் செல்வதை தடுத்தால் மட்டுமே, இதுபோன்ற விபத்துகளில் இருந்து விலைமதிக்க முடியாத உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்.

SCROLL FOR NEXT