க்ரைம்

சோழவரம் அருகே இரு ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற பரிந்துரை

செய்திப்பிரிவு

சென்னை: சோழவரம் அருகே இரு ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற டிஜிபி-க்கு பரிந்துரைத்துள்ளதாக ஆவடி காவல்துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பாடியநல்லூரைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பார்த்திபன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய சண்டே சதீஷ், முத்து சரவணன் ஆகியோர் கடந்த ஆண்டு சோழவரம் அருகே போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் முத்து சரவணனின் தந்தை கோவிந்தராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘எனது மகன் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனது மகன் தப்பிக்க முயன்றதால் தான் சுட்டுக் கொல்லப்பட்டார் என போலீஸார் கூறுவது தவறானது. காவல்துறைக்கு எதிரான வழக்கை அவர்களே விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே போலீஸார் நடத்திய இந்த என்கவுன்ட்டர் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆவடி காவல்துறை தரப்பில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற டிஜிபிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த ஜன.18-ம் தேதி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் டிஜிபியிடமிருந்து இன்னும் பதில் வரவில்லை என்பதால் வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என கோரப்பட்டது. இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை மார்ச் 11-க்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT