பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியையை கடத்திச் சென்று, கொலை செய்து, அவரது உடலை எரித்த சக ஆசிரியரை தனிப் படை போலீஸார் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமம் ஆத்தூர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் மனைவி தீபா(42). குரும்பலூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் வெங்கடேசன்(38).
இவர்கள் இருவரும் வி.களத்தூர் அருகேயுள்ள வண்ணாரம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களாகப் பணியாற்றி வந்தனர். இவர்கள் இருவரையும் நவ.15-ம் தேதி முதல் காணவில்லை. மேலும், தீபா பயன்படுத்தி வந்த காரும் காணாமல்போயிருந்தது.
இதையடுத்து, மனைவியைக் காணவில்லை என்று பாலமுருகன் அளித்த புகாரின்பேரில், வி.களத்தூர் போலீஸார் நவ.18-ம்தேதி வழக்கு பதிவு செய்தனர். இதேபோல, தனது கணவரைக் காணவில்லை என வெங்கடேசன் மனைவி காயத்ரி அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், கோவை பெரிய கடைவீதியில் ஆசிரியை தீபா பயன்படுத்திய கார் நவ. 30-ம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், காரின் பின்புறம் ரத்தக்கறை படிந்த சுத்தியல், கத்தி ஆகியவை இருந்தன. எனினும், 2 மாதங்களாகியும் இருவரையும் தனிப் படை போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், ஆசிரியை தீபாகாணாமல்போன வழக்கில், அவரைக் கடத்திச் செல்ல வெங்கடேசனுக்கு உதவியதாகவும், உண்மையை மறைப்பதாகவும் வெங்கடேசன் மனைவி காயத்ரி(33), மைத்துனர் பிரபு(40), உறவினர் ராஜா(38) ஆகியோரை பெரம்பலூர் போலீஸார் அண்மையில் கைது செய்தனர்.
இதற்கிடையே, தனிப் படை போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பிப்.8-ம் தேதி சென்னை மெரினா கடற்கரை பகுதியில் வெங்கடேசனைப் பிடித்த போலீஸார், அவரிடம் விசாரணை நடத்தினர்.
இதில், பணம் கொடுக்கல்- வாங்கல் பிரச்சினையில் தீபாதன்னை அவமானப்படுத்தியதாகவும், இதனால் அவரை பெரம்பலூர்முருக்கன்குடி வனப் பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்ததாகவும், பின்னர் அவரது உடலைகாரில் எடுத்துச் சென்று, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம்சாலையில் உள்ள வெள்ளாற்றங்கரை குப்பைமேட்டில் வீசி, பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து, வேப்பந்தட்டை குற்றவியல் நீதித் துறை நடுவர் பர்வதராஜ் முன்னிலையில் நேற்று காலை வெங்கடேசனை போலீஸார் ஆஜர்படுத்தினர். நீதிபதி உத்தரவின்பேரில், திருச்சி மத்திய சிறையில் வெங்கடேசன் அடைக்கப்பட்டார்.