கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், திருவிடைமருதூர் பகுதிகளில் ரயில் முன் பாய்ந்து 5 பேர் தற்கொலை செய்துகொண்டனர்.
கும்பகோணம் பொன்னுசாமி நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ்(42). கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.இவரது மனைவி ஆர்த்தி(40), தனியார் வங்கியில் பணிபுரிந்துவந்தார். இவர்களது மகள்கள் ஆருத்ரா(11), சுபத்ரா(7).
இந்நிலையில், ஆர்த்தி நேற்றுபாபநாசத்தில் தோழியின் வளைகாப்பு விழாவுக்குச் சென்று வருவதாகக் கூறிவிட்டு, தனது 2 மகள்களுடன் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்றார். சுந்தரப்பெருமாள்கோவில்-உத்தாணிக்கு இடையே உள்ள பகுதிக்குச் சென்ற ஆர்த்தி, தனது கண்களிலும் 2மகள்களின் கண்களிலும் துணியால்கட்டியுள்ளார். பின்னர் அந்த வழியாக வந்த ரயிலின் முன் 2 மகள்களுடன் பாய்ந்துள்ளார். இதில் 3 பேரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
தாய்-மகள் தற்கொலை: திருவிடைமருதூர் கட்டளைத் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி ரேவதி(50),மகள் மகேஸ்வரி(30). மயிலாடுதுறையில் இருந்து மைசூருக்கு சென்ற விரைவு ரயில் நேற்று மாலை திருவிடைமருதூர் ரயில் நிலையம் அருகில் வந்துகொண்டிருந்தபோது, ரேவதி, மகேஸ்வரி இருவரும் அந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர்.
கும்பகோணம் பகுதியில் ஒரே நாளில் 5 பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டது, அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இவர்கள் எதற்காக தற்கொலை செய்துகொண்டனர் என்று கும்பகோணம் ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.