நெல்லூர்: கடந்த வெள்ளிக்கிழமை இரவு சுமார் 40 பயணிகளுடன் ஒரு தனியார் சொகுசு பேருந்து சென்னையிலிருந்து ஹைதராபாத் நோக்கி புறப்பட்டது.
ஆந்திர மாநிலம் நெல்லூரை அடுத்த காவலி முசுநூரு பகுதியிலுள்ள சோதனைச்சாவடி அருகே நேற்று அதிகாலை, சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது பின்னாலிருந்து வேகமாக வந்த மற்றொரு லாரி மோதி விபத்துக்குள்ளானது. அதே சமயத்தில் சென்னையிலிருந்து ஹைதராபாத் நோக்கி வேகமாக சென்ற சொகுசு பேருந்து விபத்துக்குள்ளான அந்த 2 லாரிகள் மீது வேகமாக மோதியது.
இந்த பயங்கர விபத்தில் 2 லாரி மற்றும் பேருந்து ஓட்டுநர் உட்பட பேருந்தில் பயணித்த 3 பயணிகள் என மொத்தம் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பேருந்தில் பயணம்செய்த 15 பயணிகள் படுகாயமடைந்தனர். அவர்கள் காவலிமற்றும் நெல்லூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்ததும், காவலி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கோர விபத்தால் நேற்று அதிகாலை சென்னை - விஜயவாடா தேசிய நெடுஞ் சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.