சென்னை: பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் போலீஸார் நடத்திய விசாரணையில், பெல்ஜியம் நாட்டின் ஐ.பி. (IP) முகவரியில் இருந்து மின்னஞ்சல் வந்தது தெரியவந்துள்ளது.
சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்ம நபர் ஒருவர் அனுப்பிய மின்னஞ்சலில், பல்வேறு இடங்களில் உள்ள 13 தனியார் பள்ளிகளில் வெடிகுண்டு வெடிக்கும் என்று மிரட்டல்விடுக்கப்பட்டிருந்தது. தகவலறிந்து பள்ளிகளுக்குச் சென்ற போலீஸார், வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனை நடத்தினர்.
மேலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, மாணவர்கள் பெற்றோருடன் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து, மிரட்டல் விடுத்த நபரைத் தேடி வருகின்றனர்.
இதே பாணியில் மிரட்டல்... மேலும், ஏற்கெனவே இதே பாணியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்களின் பட்டியலை சேகரிக்கும் பணியிலும் போலீஸார்ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களுக்கு இந்தவழக்கின் விவரங்களைத் தெரிவித்து, பழைய குற்றவாளிகளின் விவரங்களைச் சேகரித்து வருகின்றனர்.
இதற்கிடையில், சைபர் க்ரைம் போலீஸார், மின்னஞ்சல் அனுப்பிய நபரின் ஐ.பி. முகவரியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில், பெல்ஜியம் நாட்டின் ஐ.பி. முகவரியில் இருந்து மின்னஞ்சல் வந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.