கோவை: கோவை பீளமேட்டில் தொழிலதிபர் குடும்பத்தினரை கட்டிப் போட்டு, வீட்டிலிருந்த ரூ.10 லட்சம் பணம், 30 பவுன் நகை ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
கோவை பீளமேட்டில் உள்ள புரானி காலனியை சேர்ந்தவர் சபீர் ( 65 ). தொழில திபர்.நேற்று முன்தினம் இரவு வீட்டில் சபீர், அவரது மனைவி மற்றும் தாயார், 2 பேத்திகள் தூங்கிக் கொண்டிருந்தனர். மகன் முகமது, மனைவியுடன் வெளியூர் சென்றிருந்தார். நேற்று அதிகாலை 1 மணியளவில் முகமூடி அணிந்திருந்த 4 பேர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். சத்தம் கேட்டு எழுந்த சபீர், மனைவி, தாய் மற்றும் 2 பேத்திகளை கத்தியை காட்டி மிரட்டி, கை, கால்களை கட்டிப் போட்டனர்.
பீரோவில் இருந்த ரூ.10 லட்சம் பணம், 30 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு வைர நெக்லஸ், விலை உயர்ந்த கைக் கடிகாரம், வெளி நாட்டு பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். போராடி கட்டுகளை அவிழ்த்துக் கொண்ட சபீர் குடும்பத்தினர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் நடந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
காவல் துணை ஆணையர் சரவணக் குமார், உதவி ஆணையர்கள் பார்த்திபன், கணேஷ் மற்றும் பீளமேடு போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையில் ஈடுபட்டனர். தடயவியல் நிபுணர்கள் வந்து வீட்டில் பதிவாகி இருந்த கை ரேகைகள் உள்ளிட்ட ஆதாரங்களை சேகரித்தனர். தப்பிச் சென்ற கொள்ளையர்களை பிடிக்க 6 தனிப் படைகள் அமைக்கப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.