தாம்பரம்: தாம்பரம் வழக்கறிஞர் வீட்டில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தாம்பரம் மாந்தோப்பு, மீனாம்பாள் தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் (60) சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் மாலை, அவரது வீட்டின் உட்புற கண்ணாடி திடீரென உடைந்து நொறுங்கியது. கண்ணாடி உடைந்த இடத்தை பார்த்த போது துப்பாக்கி குண்டு இருந்தது.
இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் தாம்பரம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் விரைந்து துப்பாக்கி குண்டை கைப்பற்றினர். மேலும், அந்த துப்பாக்கி குண்டு, 1 கி.மீ., தூரத்தில் இருந்து வந்திருக்கலாம் எனவும், யாராவது தவறுதலாக துப்பாக்கியால் சுட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும், தாம்பரம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், கைப்பற்றப்பட்ட துப்பாக்கி குண்டு, ஏ.கே., 47 அல்லது எஸ்.எல்.ஆர்., துப்பாக்கி வகையை சார்ந்தவையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், எந்த வகையான குண்டு என்பதை கண்டறிய, மயிலாப்பூரில் உள்ள தடயவியல் ஆய்வகத்துக்கு குண்டு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், 1 கி.மீ., தூரத்தில் இருந்து குண்டு வந்திருக்கலாம் என சந்தேகிப்பதால், தாம்பரம் மேம்பாலத்தை ஒட்டியுள்ள, பாதுகாப்பு துறை குடியிருப்பு மற்றும் கிழக்கு தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை பயிற்சி மையத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று சம்பவம் நடந்த பகுதியில் நேற்று காலை தாம்பரம் போலீஸார் சோதனை நடத்தியபோது துப்பாக்கி குண்டு பாய்ந்த வீட்டுக்கு முன் தெருவில் இரண்டு இடங்களில் துப்பாக்கி குண்டுகள் சிதறி கிடந்தன. இதில் ஆறு துப்பாக்கி குண்டுகளை கைப்பற்றிய போலீஸார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.
ஏ.கே, 47, வகை துப்பாக்கியில் இருந்து இந்த குண்டுகள் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்ததால் தாம்பரம் விமானப் படைதளத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் விமானப்படை வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும்போது துப்பாக்கி குண்டுகள் தவறுதலாக குடியிருப்பு பகுதியில் வந்ததா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக விமானப்படை அதிகாரிகளிடம் போலீஸார் விளக்கம் கேட்டுள்ளனர். அவர்கள் உறுதி செய்த பின்பு தான் இந்த துப்பாக்கி குண்டுகள் இந்திய விமானப்படை தளத்தில் இருந்து வந்ததா? என தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.