கல்லுவழி கிராமத்தில் கொள்ளை சம்பவத்துக்கு பின்னர், ஆபிரகாம் வீட்டில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா. 
க்ரைம்

காளையார்கோவில் அருகே கொள்ளை சம்பவத்தால் வீடுகளில் சிசிடிவி பொருத்தும் கிராம மக்கள்

செய்திப்பிரிவு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கல்லுவழியைச் சேர்ந்த ஜேக்கப் பாரி. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். ஜன.26-ம் தேதி அதிகாலை அவரது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி, மகன், மகள், தந்தை, தாயார் ஆகிய 5 பேரையும் ஒரு கும்பல் தாக்கி கொள்ளையடித்தது.

காயமடைந்த 5 பேரும் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட எஸ்பி அரவிந்த் உத்தரவின் பேரில் 8 தனிப் படைகள் அமைக்கப்பட்டன. மேலும் கொள்ளை நடந்த வீட்டை சம்பவம் நடப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன், 2 பேர் புகைப் படம் எடுத்துள்ளனர். அங்கிருந்தோர் அவர்களை தட்டிக் கேட்டதும், பதில் கூறாமல் அங்கிருந்து சென்றுள்ளனர். அவர்கள் குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். கொள்ளை நடந்த வீட்டில் சிசிடிவி கேம ராக்கள் இல்லாததால் கொள்ளையர்களைக் கண்டறிய முடியாமல் போலீஸார் திணறு கின்றனர்.

இதையடுத்து அச்சமடைந்த கிராம மக்கள் தங்களது வீடுகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி வருகின்றனர். மேலும் அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன், மாவட்ட எஸ்பி அரவிந்த சமரசத்தை அடுத்து கொள்ளை சம்பவத்தைக் கண்டித்து நடப்பதாக இருந்த போராட்டத்தை கிராம மக்கள் ஒத்தி வைத்தனர். இது குறித்து விவசாயி ஆபிரகாம் கூறுகையில் ‘‘கொள்ளை அச்சத்தால் எங்களது வீட்டில் தற்போது சிசிடிவி கேமராக்கள் பொருத்தியுள்ளோம்’’ என்று கூறினார்.

திருவிழாவுக்கு செல்ல முடியவில்லை: இது குறித்து சபரி முத்து கூறுகையில் ‘‘ கடந்த 3 ஆண்டுகளாக எங்களது ஊரைச் சேர்ந்த சிலர் கச்சத் தீவு திருவிழாவுக்குச் செல்வோம். இந்தாண்டு கச்சத் தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா பிப்.23, 24-ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதற்காக பிப்.6-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், எங்களது வீட்டின் பக்கத்து வீட்டில் கொள்ளை நடந்ததால், இந்தாண்டு திருவிழாவுக்குச் செல்லவில்லை. அதேபோல் மற்றவர்களும் திருவிழாவுக்குச் செல்லவில்லை’’ என்று வேதனையுடன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT