க்ரைம்

சிட்டாவில் பெயர் நீக்க ரூ.20,000 லஞ்சம் பெற்ற விஏஓ கைது @ தருமபுரி

எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: தருமபுரி அருகே சிட்டாவில் பெயர் நீக்கம் செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற விஏஓ, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸாரால் வெள்ளிக்கிழமை (ஜன. 5) கைது செய்யப்பட்டார்.

நல்லம்பள்ளி வட்டம் மிட்டா நூல அள்ளி அடுத்த பூசாலிகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி. இவரது தாத்தாவின் பெயரில் உள்ள 18 சென்ட் நிலத்தின் சிட்டா ஆவணத்தில் கமலேஷன் என்பவர் பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டிருப்பதாகவும், அந்தப் பெயரை நீக்கம் செய்து தர வேண்டும் என்றும் கணேசமூர்த்தி நூல அள்ளி கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இங்கு விஏஓ-வாக அரூர் வட்டம் மாம்பட்டி அடுத்த தைலாபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் (36) என்பவர் பணியாற்றி வருகிறார்.

சிட்டாவில் பெயர் நீக்கம் செய்யும் பணிக்கு கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேசன் லஞ்சமாக ரூ.20 ஆயிரம் கேட்டுள்ளார். லஞ்சம் வழங்க விரும்பாத கணேசமூர்த்தி, இது தொடர்பாக தருமபுரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாரை அணுகியுள்ளார். அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் வெள்ளிக்கிழமை அன்று ரூ.20 ஆயிரம் பணத்துடன் கணேசமூர்த்தி சென்றுள்ளார்.

அப்போது, விஏஓ வெங்கடேசன் உத்தரவின்பேரில் தனியார் அலுவலர் அமுதா என்பவர் கணேசமூர்த்தியிடம் இருந்து ரூ.20 ஆயிரம் பணத்தை பெற்றுள்ளார். அதுவரை மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் அமுதா, விஏஓ வெங்கடேசன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT