சென்னை: குலுக்கல் முறையில் தங்கம் தருவதாக நூதன முறையில் பண மோசடி செய்ததாக தம்பதி மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை வில்லிவாக்கம் மற்றும் சுற்றுப் பகுதியைச் சேர்ந்த 50 பெண்கள் உட்பட 60 பேர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திரண்டு நேற்று புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அதில், ``வில்லிவாக்கத்தைச் சேர்ந்தகணவன், மனைவி இருவரும் கூட்டாக சேர்ந்து பொதுமக்களுக்கு தவணை முறையில் தங்கம் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
இதற்காக வாரந்தோறும் ரூ.50, ரூ.250, என்ற விகிதத்தில் பணம் வசூலித்தனர். இப்படி பணம் கட்டுபவர்களை வாரந்தோறும் குலுக்கல் முறையில் தேர்வு செய்துஒரு பவுன், 3 பவுன் எனத் தங்கம் தருவதாக உறுதி அளித்தனர்.
இதை நம்பி 6,500-க்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தில் சேர்ந்தனர். ஆனால், உறுதி அளித்தபடி நகை வழங்கவில்லை. ரூ.55 கோடிவரை மோசடி நடைபெற்றுள்ளது.
பணம் வசூலித்து உறுதியளித்தபடி தங்கம் தராமல் மோசடி செய்த கணவன் - மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நாங்கள் கட்டிய பணத்தை திரும்பப் பெற்றுத் தர வேண்டும்'' எனப் புகாரில் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் விசார ணையைத் தொடங்கி உள்ளனர்.