மதுரை: மதுரையில், தெருவில் சுற்றும் நாயை கம்பியால் தாக்கி அடித்து இழுத்துச் சென்ற நபரை விலங்குகள் நல பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த அண்ணாநகர் காவல்துறையினர்.
மதுரை மாநகர் உலக தமிழ்ச் சங்கம் அருகே உள்ள கரும்பாலை பகுதியில் வசிக்கக்கூடிய நபர் பழனியப்பன் (32). இவர் அதே பகுதியில் தெருவில் சுற்றித் திரிந்த நாய் ஒன்றை கம்பியால் தாக்கி அதனை இழுத்துச் சென்றுள்ளார். இது குறித்து விலங்குகள் நல வாரிய பிரதிநிதி முருகேஸ்வரி என்பவருக்கு வீடியோ ஆதாரத்துடன் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வீடியோ ஆதாரத்துடன் விலங்குகள் நல வாரிய பிரதிநிதி முருகேஸ்வரி மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்
இதனையடுத்து விலங்குகள் நல பாதுகாப்பு சட்டத்தின் கீழ், நாயை துன்புறுத்தி தாக்கி கொடுமைப் படுத்திய வழக்கில் பழனியப்பனை அண்ணா நகர் காவல் துறையினர் கைது செய்தனர். இதேபோல் மதுரையில் பல்வேறு பகுதிகளிலும் தெருவில் சுற்றி திரியும் நாய்களை, மது போதையில் கொடூரமாக தாக்கி கம்பியால் அடித்து கொலை செய்யும் புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது, இது தொடர்பான புகார்களில் அடுத்தடுத்து நடவடிக்கைகளை காவல் துறையினர் தீவிரப் படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.