கரூர்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முதியவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் வழங்கவும் கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.
கரூர் திருமா நிலையூரைச் சேர்ந்தவர் மேகநாதன் (63). இவர் மனைவி மின்சாரம் தாக்கி உடல் நலம் பாதிக்கப்பட்டார். இவரது வீட்டில் ஒரு பெண் வாடகைக்கு குடியிருந்தார். அவரது 14 வயதான இளைய மகள் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அந்தச் சிறுமியை மேகநாதன் வீட்டு வேலைக்கு அழைத்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பரில் சிறுமியை பாத்திரம் கழுவ வீட்டுக்கு அழைத்த மேகநாதன், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும், ‘இது குறித்து வெளியே கூறினால் உன்னையும், உன் அம்மாவையும் கொன்று விடுவேன்’ என மிரட்டியுள்ளார். சிறுமியின் குடும்பத்தினர் வீட்டை காலி செய்து வேறு வீட்டுக்கு சென்ற பிறகும், அச்சிறுமி பள்ளிக்கு செல்லும்போது அவருக்கு தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாய், கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி புகார் அளித்தார். மேகநாதன் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் நீதிபதி ஏ.நசீமா பானு இன்று ( ஜன.2 ) தீர்ப்பு வழங்கினார். அந்தத் தீர்ப்பில், குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் மேகநாதனுக்கு ஆயுள் கால சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராமும், மேலும், கொலை மிரட்டல் விடுத்ததற்காக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதங்களை செலுத்தத் தவறினால் மேலும் ஒன்றரை ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்து, அவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.4 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.