க்ரைம்

வீட்டில் தனியாக இருந்த பிசியோ தெரபிஸ்ட் கொலை @ கோவை

செய்திப்பிரிவு

கோவை: கோவை செட்டிபாளையம் அருகே வீட்டில் இருந்த பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

போத்தனூர் செட்டிபாளையம், அம்பேத்கர் நகர் முதல் வீதியை சேர்ந்தவர் பாலா இசக்கி முத்து (28). மாநகராட்சி குப்பை அள்ளும் வாகன ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி (32). பிசியோதெரபிஸ்ட். மன்னார்குடியை சேர்ந்த இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். கோவையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனியார் மருத்துவமனையில் பணியாற்றியபோது ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்த பாலா இசக்கி முத்துவுடன் பழக்கம் ஏற்பட்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

நேற்று முன்தினம் மாலை பாலா இசக்கி முத்து வீடு திரும்பிய போது, வீட்டில் தனலட்சுமி காயமடைந்து வாயில் ரத்தத்துடன் உயிரிழந்து கிடப்பதை கண்டு போலீஸாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்துக்கு சென்ற செட்டிபாளையம் போலீஸார் சடலத்தை கைப் பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 8.5 சவரன் தங்க நகைகள் மற்றும் தனலட்சுமியின் மொபைல் போன் காணாமல் போயுள்ளதும், வீட்டுக்கு ஒரு பெண், ஆண் வந்து சென்றதும் தெரியவந்துள்ளது. போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT