மதுரை: துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பயணிகள் இருக்கை அடியில் பேஸ்ட் வடிவிலான ரூ.59.27 லட்சம் மதிப்புள்ள 940 கிராம் எடை கொண்ட தங்கத்தை கைப்பற்றி சுங்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை விமானத்துக்கு துபாயில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் இன்று பகல் 12.30 மணி அளவில் வந்தடைந்தது. முன்னதாக, துபாயில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக வந்த தகவலையடுத்து மத்திய சுங்க இலாகாவின் வான் நுண்ணறிவு பிரிவினர், விமானத்தில் வந்த 182 பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில் பயணிகளிடம் எந்தப் பொருளும் கைப்பற்றப்படாத நிலையில், விமானத்தில் உள் பகுதியில் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பயணிகள் இருக்கையின் அடியில் சந்தேகப்படும்படி பொருள் ஒன்று இருப்பதாக விமான நிறுவன ஊழியர்களால், அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதனையடுத்து, மதுரை விமான நிலைய சுங்க இலக்கா வான நுண்ணறிவு பிரிவினர் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் கைப்பற்றப்பட்ட பொருள் பேஸ்ட் வடிவிலான தங்கம் என்பது தெரியவந்தது. அதனை உருக்கி அளவிட்டத்தில் 59.27 லட்சம் ரூபாய் மதிப்பிலான 940 கிராம் எடையுள்ள தங்கம் இருப்பது தெரியவந்தது. இது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.