சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் ஷூ கடை ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.20 லட்சம் பறித்தது தொடர்பாக கைது செய்யப்பட்டோர். 
க்ரைம்

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் ஷூ கடை ஊழியரிடம் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்ததாக 5 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை கடற்கரை ரயில்நிலையத்தில் ஷூ கடை ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி, ரூ.20 லட்சத்தை வழிப்பறி செய்த5 பேரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர். சென்னை புதுபெருங்களத்தூர் சீனிவாசா நகர் கலைஞர் சாலையை சேர்ந்தவர் சிராஜீதின் (33). இவர் புது பெருங்களத்தூரில் உள்ள ஒரு ஷூ கடையில் பணியாற்றி வருகிறார். இவர் வியாபாரம் தொடர்பாக வாடிக்கையாளர்களிடம் பணத்தைப் பெற சென்னை பர்மா பஜாருக்கு வந்து செல்வது வழக்கம். அந்தவகையில், சிராஜீதின் வழக்கம்போல பணத்தை பெற, சென்னை பர்மா பஜாருக்கு நேற்று முன்தினம் காலை வந்தார். அங்கு வாடிக்கையாளரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு, கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து புது பெருங்களத்தூருக்கு மின்சார ரயிலில் செல்ல திட்டமிட்டிருந்தார்.

அதற்காக சென்னை கடற்கரை ரயில் நிலையத்துக்குள் வந்துகொண்டிருந்தார். அப்போது, 5 பேர் கொண்ட மர்மநபர்கள் அங்கு வந்து, தாங்கள் காவல்துறையினர் என்று கூறி அவரது பையை பரிசோதித்தனர். அதில், ரூ.20லட்சம் பணம் இருந்தது. உடனே அந்த பணத்தை அவர்கள் எடுத்துச்சென்றபோது, அவர்களை சிராஜீதின் தடுத்தார். உடனே, அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி ரூ.20 லட்சம் பணம் மற்றும் 2 கைப்பேசியை பறித்துக்கொண்டு சென்றபோது, தடுக்க முயன்ற சிராஜீதினை படிக்கட்டில் தள்ளிவிட்டு ஓடிவிட்டனர். இது குறித்து எழும்பூர் ரயில்வே போலீசில் சிராஜீதின் புகார் கொடுத்தார். இதன்பேரில், போலீஸார் வழக்குப்பதிந்து, குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. முதல்கட்டமாக, அந்தப்பகுதி சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.

மேலும், சைபர் க்ரைம் பிரிவு போலீஸாரின் உதவியுடன் தேடிவந்தனர். இந்நிலையில், பூங்கா நகர் ரயில் நிலையம் மற்றும் கோயம்பேட்டில் பதுங்கி இருந்த கடலூரைச் சேர்ந்த தமிழ்மணி (27), பாலச்சந்தர் (42), பிரகாஷ் (29), சதீஷ் (22), புதுச்சேரியைச் சேர்ந்த சிவா (32) ஆகிய 5 பேரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர். இது குறித்து ரயில்வே போலீஸார் கூறும்போது, ‘‘குற்றவாளிகளில் ஒருவரான தமிழ்மணி, பாண்டிபஜாரில் கடந்த6 மாதத்துக்கு முன்பு வேலை பார்த்துள்ளார். அப்போது, பர்மா பஜாரில் இருந்து புதுபெருங்களத்தூருக்கு லட்சக்கணக்கில் பணம் கொண்டு செல்வதை தெரிந்து வைத்திருக்கிறார். அந்த பணத்தை கொள்ளையடிக்க தனது நண்பர்களுடன் திட்டமிட்டார். இதற்காக, சில மாதங்களுக்கு முன்பு சென்னை வந்து நோட்டமிட்டு வந்தார். சம்பவத்தன்று, சிராஜீதின் பணத்தை எடுத்துச் செல்வதை அறிந்து, மடக்கி பறித்துச் சென்றுள்ளனர்’’ என்றனர்.

SCROLL FOR NEXT